நீர் விளையாட்டில் விபத்து: கோமாவில் இருந்து இரண்டு வாரத்திற்கு பிறகு மீண்ட நியூசி. வாலிபர்

269 0

ஆற்றில் நீர் விளையாட்டில் ஈடுபட்டபோது ஏற்பட்ட பயங்கர விபத்தால் கோமா நிலைக்குச் சென்ற நியூசிலாந்து வாலிபர், இரண்டு வாரத்திற்குப் பிறகு சுயநினைவுக்கு திரும்பியுள்ளார்.

நியூசிலாந்தைச் சேர்ந்தவர் பிராண்டன் டெம்மாக்ஸ் (வயது 31). இவர் கடந்த 18-ந்தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள முர்ரே ஆற்றில் தனது நண்பர்களுடன் டியூபிங் என்ற நீர்விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் அவரது தலை மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் அவரது தலையில் பயங்கர காயம் ஏற்பட்டது. மண்டையோடும் சிதைந்தது.

இந்த நிலையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால், வாரக்கணக்கில் கோமாவில் இருக்க வேண்டும். அவர் நிரந்தர பக்கவாத நோயால் பாதிக்கப்படலாம் என்று டாக்டர்கள் எச்சரித்தனர். இதற்கிடையே நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் அவரது உடல்நிலை மேலும் கவலைக்குள்ளானது.

மெல்மோர்ன் மருத்துவமனையில் உள்ள 20 டாக்டர்களின் அயராத பணியால் 2 வாரத்திற்குப் பிறகு பிராண்டனுக்கு சுயநினைவு திரும்பியது. அவர் தனது மூச்சுக்குழாயை நீக்கிவிட்டு, அம்மாவை எங்கே என்று கேட்டதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது சகோதரி கூறுகையில் ‘‘கடந்த சில நாட்களாக சற்று குழப்பாக இருந்தார். ஆனால் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் அடைந்து வந்தார். நேற்று திருப்புமுனையாக மாறியது. பிராண்டனின் மண்டையோட்டில் ஏராளமான முறிவுகளும், மூளையில் ரத்தக்கசிவும் இருந்தது. சிகிச்சை முடிந்து நியூசிலாந்து திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும்’’ என்றார்.