எங்களை தீவிரவாதிகள் என்பதா? அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

230 0

தீவிரவாத நாடு பட்டியலில் தங்களை சேர்த்தால், அதற்கு கடுமையான விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னின் அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 45), மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விமான நிலையத்தில் 13-ந் தேதி தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதம் கொண்டு படுகொலை செய்யப்பட்டார். இதில் வடகொரியாவுக்கு தொடர்பு இருப்பதாக தென்கொரியா குற்றம் சாட்டி வருகிறது.

இதன்காரணமாக வடகொரியாவை தீவிரவாத நாடுகள் பட்டியலில் மீண்டும் சேர்க்க அமெரிக்கா எண்ணி வருவதாக தென்கொரியா மற்றும் ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது வடகொரியாவுக்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

இதுபற்றி அந்த நாடு கருத்து தெரிவிக்கையில், “வடகொரியாவை அமெரிக்கா மீண்டும் தீவிரவாத நாடு பட்டியலில் சேர்த்தால், அதற்கு கடுமையான விலை கொடுக்க நேரிடும்” என்று கூறி உள்ளது.

இந்த கருத்தை வெளியிட்ட வடகொரியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், “வடகொரியா அனைத்து வடிவத்திலான தீவிரவாதத்தையும் எதிர்த்து வருகிறது. ஆனால் அமெரிக்கா எங்கள் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறது” என குறிப்பிட்டார்.

கிம் ஜாங் நாம் படுகொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வடகொரியா உறுதிபட தெரிவித்துள்ளது. இப்படி ஒரு விஷம பிரசாரத்தில் தென்கொரியா, அமெரிக்கா, மலேசியாதான் ஈடுபட்டு வருவதாக வடகொரியா குற்றம் சாட்டி உள்ளது.