போருக்குப்பின்னரான குடியேற்றங்களும் இனங்களுக்கிடையிலான நல்லுறவும்

120 0

திருகோணமலை – தென்னைமரவாடி பிரதேசத்தில் பாழடைந்த நிலையில் காணப்படும் தமிழ் மக்களின் வீடு

“எங்களுக்கு இங்கு தமிழர்களால் எந்தப் பிரச்சினையும் இல்லை. 2013ஆம் ஆண்டு இங்கு குடியேறினோம். பொருளாதாரப் பிரச்சினைகளைத் தவிர இன ரீதியான பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொண்டிருக்கவில்லை” என்கிறார் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் நெடுங்கேணி பிரதேசத்தில் மகாவலித் திட்டத்தின் ஊடாக குடியேற்றப்பட்டிருக்கும் ரி.எம்.இந்திராணி.

2013ஆம் ஆண்டு வவுனியாவின் எல்லைப் பிரதேசமான நெடுங்கேணி பிரதேசத்தில் அரசாங்கத்தினால் குடியேற்றப்பட்டவர்கள் இந்திராணி போன்ற பெரும்பான்மை இனத்தவர்கள்.

இலங்கையில் இன முரண்பாட்டுச் சிக்கல்கள் காரணமாக 1978களில் ஆரம்பித்த யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் மௌனிக்கச் செய்யப்பட்டதையடுத்து உருவாகியிருக்கின்ற நல்லிணக்க மற்றும் நல்லுறவு எவ்வாறான நிலையில் இருக்கிறது என்பது ஆராய்வுக்குரியதே.

வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டம் தமிழ், சிங்களம், முஸ்லிம் என மூவினங்களையும் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் பிரதேசமாகும். இங்கு தமிழ், முஸ்லிம்களுடன் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களும் வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள். ஏனைய தொழில்களிலும் ஈடுபட்டுவருகிறார்கள். அத்துடன் இவர்கள் அனைவரும் அரசியல் ரீதியான முரண்பாடுகள் காணப்பட்டாலும் நல்லிணக்கத்துடனேயே வாழ்ந்தும் வருகிறார்கள்.

இருந்தாலும் அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள குடியேற்றங்கள் மூலமாக ஒருசில பிரச்சினைகள் ஏற்பட்டுவருகின்றன என்றே கூற முடியும்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் தமிழர்கள்  “எங்களது பிரதேசங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதால் எங்களுடைய ஜனநாயக ரீதியான நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக பிரதேச சபை பிரதிநிதித்துவத்துக்கும் பிரச்சினைக்குள்ளாகிறது. நீண்ட காலத்தில் மாகாண சபை, பாராளுமன்றம் வரை இது செல்லலாம்” என்று கூறுகின்றனர்.

அதே போன்று மகாவலித் திட்டத்தின் கீழ் குடியேறி சில்லறை வியாபாரக் கடையொன்றை நடத்திவரும், ஆர்.எம்.கருணாசிங்க,

“நாங்கள் இங்குவந்த காலத்தைப்போல் இப்போது பிரச்சினைகள் குறைவு. எங்கள் கிராமத்திலிருந்து சற்றுத் தூரத்தில் தமிழ் சகோதரர்களும் இருக்கிறார்கள்” என்கிறார்.

நெடுங்கேணியில் சில்லறை வியாபாரக் கடை நடத்திவரும், ஆர்.எம்.கருணாசிங்க

இலங்கையில் யுத்தம் ஆரம்பிக்கப்படுவதற்கு, திட்டமிட்ட குடியேற்றங்களும் காரணமாக இருந்திருக்கின்றன. யுத்தம் மௌனிக்கச் செய்யப்பட்ட பின்னரும் அவ்வாறான குடியேற்றங்கள் நிறுத்தப்படவில்லை. மகாவலித் திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல ஏனைய மகாவலித் திட்டத்தின் கீழுள்ள பிரதேசங்களிலும் இவ்வறான குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. இருந்தாலும் வடக்கு கிழக்கு தமிழர்களது பிரதேசங்களில் பெரும்பான்மை இனத்தவர்களைக் குடியேற்றுகையில் பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன.

தங்களது பூர்வீக நிலங்கள் பறிபோகின்றன. தமிழர்களின் விகிதாசாரம் குறைக்கப்படுகிறது என்ற வகையிலான குற்றச்சாட்டுக்கள் தமிழர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகின்றது.

“குடியேற்றப்படுபவர்கள் பயிர் செய்வதற்கு காடுகளை வெட்டி வேலை செய்து காணிகளை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் எங்களது காணிகளை சரியான முறையில் சீர் செய்வதற்குக் கூட எங்களால் முடிவதில்லை.” என்று வவுனியாவைச் சேர்ந்த சிவகுரு சிவசெந்தில்நாதன் கூறுகிறார்.

சிவகுரு சிவசெந்தில்நாதன்

அதிகாரிகள் தரப்பில் பெரும்பான்மை சிங்களவர்களுக்கிருக்கும் அனுசரணைகள் தமிழ் மக்;களுக்கு இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அவதானிக்கப்படுகிறது.

அதே போன்று “இவ்வாறு சிங்கள மக்கள் எம்முடைய பிரதேசங்களுக்குள் குடியேற்றப்படுவதனால் எதிர்காலத்தில் எவ்வாறான பிரச்சினைகள் உருவாகும் என்று சொல்லமுடியாதுள்ளது. குறிப்பாக காணிப்பிரச்சினை, அரசியல் பிரச்சினைகளும் ஏற்படலாம்” என்ற கருத்துக்களும் வெளியிடப்படுகின்றன.

யுத்த காலத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்.  1990களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு மாவட்டங்களில் வசித்துவந்த முஸ்லிம் மக்கள் 2009க்குப் பின்னர் மீளவும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

“அந்தக்காலத்திலிருந்து நாங்கள் நல்லுறவுடன்தான் வாழ்ந்து வருகிறோம். தமிழ் மக்களும் அன்புடன்தான் இருந்து வந்தார்கள். 1990ஆம் ஆண்டு நடைபெற்ற விடயம் எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எங்களுக்குமிடையிலானதல்ல. அது இயக்கங்களின் ஏதோ ஒரு அரசியல் ரீதியான பிரச்சினை. 97இல் நாங்கள் வந்தவேளை அதனை அவர்கள் துரதிஸ்டவசமானதாக தெரியப்படுத்தினார்கள். அதற்காக வருத்தமும் தெரிவித்தார்கள்” என்கிறார் யாழ் நகரில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் எம்.எம்.தாஹிர் தெரிவித்தார்.

யாழ் நகரில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் எம்.எம்.தாஹிர்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் யாழ். பெண்கள் அபிவிருத்தி மையத்தின் தலைவியான சிகானா அனிஸ்,  “1990இல் இடம்பெயர்ந்து 2010இல் குடியேறி பல்வேறு சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறேன்;. யாழ்ப்பாணத்தில், முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் எங்களால் அவதானிக்க முடிகின்ற விடயம். எங்களது மக்கள் எல்லோரும் இங்கு வந்து குடியேறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படாமையே தவிர வேறொன்றுமில்லை. தமிழ்ப் பெண்களுடன் இணைந்து வேலை செய்கிறோம். உறவாடுகிறோம். பண்டிகைக் காலங்களில் தமிழ் மக்கள் கூட முஸ்லிம் வியாபாரிகளைத்தான் அதிகம் நம்பியிருக்கிறார்கள். நியாயமான, குறைந்த விலையில் விற்பார்கள் என்ற ஒரு நிலைப்பாடு இப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது” என்றார்.

யாழ். பெண்கள் அபிவிருத்தி மையத்தின் தலைவியான சிகானா அனிஸ்

“1990ல் வடக்கிலிருந்து வெளியேறியவர்களில் நானும் ஒருத்தி. தமிழ் மக்களோடு வாழக்கூடிய சூழ்நிலையைப் பொறுத்தவரையில் அன்னியோன்னியம், சுமுகமான நிலை இருக்கிறது. தொழில் செய்வதில் எந்தத் தடையும்; இல்லை” என்று தெரிவிக்கிறார் யாழ்ப்பாணம் நாவாந்துறையில் வசித்துவரும் முஸ்லிம் இனத்தை; சேர்ந்த பெண்ணான எஸ்.எம்.பாஜிதா.

இதேவேளை, எமுஸ்லிம் மக்களது மீள் வருகை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த என்.சௌந்தரராஜன்

“ஒரு காலத்தில் முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் கசப்புணர்விருந்தது. உண்மை. ஆனால் தற்போதைய நிலையில் அவற்றையெல்லாம் மறந்து முஸ்லிம் மக்கள்  சகோதரத்துவத்துடன் தமிழ் மக்களுடன் பழகுகிறார்கள். அவர்களுடன் எந்த விதமான வேறுபாடுகளும் எங்களுக்குள் கிடையாது. ஒரு காலத்தில் மட்டுமல்ல. எந்தக்காலத்திலும் அவர்கள் சகோதரத்துவத்துடன் தான் வாழ்கிறார்கள்” என்று கூறுகிறார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த என்.சௌந்தரராஜன்

“முஸ்லிம்களது சந்தோசமான விழாக்களில் தமிழ் மக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். வியாபார நிலையங்களில் எம்மவர்களும், எங்களது வியாபார நிலையங்களில் முஸ்லிம் இளைஞர்களும் வேலை செய்கிறார்கள். இது ஒரு சகோதரத்துவமான நிலை என்றுதான் சொல்லலாம். இது வெளிப்படையாகவே தெரிந்து கொள்ளக்கூடிய விடயம்” என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் என பல்லினம் கொண்ட நாட்டில் ஏற்பட்ட இன வன்முறை யுத்தமானது பல்வேறு மாற்றங்களையும், அழிவுகளையும் ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

புன்னைக்குடா, மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே 18 கிலோ மீற்றரிலுள்ள மீன்பிடிக் கிராமம். இங்கு பிறின்சஸ் பெரேரா கடற்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் மீன்படித் தொழிலை மேம்படுத்துவதற்காக 1979ஆம் ஆண்டில் மாத்தறை, காலி மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். 83களில் உருவான இன முறுகல் இவர்களை இடம்பெயர்ந்து மாத்தறைப் பிரதேசத்திற்குச் செல்ல வைத்தது. 2009க்குப் பின்னர் இவர்கள் இப்பிரதேசத்திற்கு வந்து மீண்டும் குடியேறியுள்ளனர். அடிப்படை வசதிகள் முழுமையாக இல்லாவிட்டாலும் அவற்றினை சம்பந்தப்பட்டவர்களிடம் கோரியபடியே சிறிய வியாபாரம், கடற்தொழில் போன்றவற்றில் ஈடுபட்டவண்ணம் வாழ்ந்து வருகிறார்கள்.

தங்களது வாழ்க்கை நிலை குறித்து புன்னைக்குடாவில் வதியும் சிங்கள இனத்தவரான 65 வயதுடைய டப்ளியூ. எச்.ரத்னபால,

“எனக்கு 5 பிள்ளைகள், எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லாமல்தான் இருந்தோம். ஆமி உடுப்பு போட்ட ஆக்கள்வந்து சொன்னார்கள். எங்களுக்கு நீங்கள் இருக்கிற பிரச்சினை இல்லை. ஆனால் வேற யாரும் வந்து ஏதும் நடந்தால் எங்களுக்கு ஒண்டும் செய்ய ஏலாது என்று, அதன் பிறகுதான் நாங்கள் மாத்தறைக்கு போனம். அங்கு சென்று அகதி முகாம்களில் இருந்து பின்னர் வேறு இடங்களுக்குச் சென்ற சிறு வீடுகள் அமைத்துக் கொண்டு இருந்தோம். பிரபாகரன் சேர் இறந்ததன் பின்னர் 2010அளவில்தான் இங்கு வந்தோம்” என்கிறார்.

“இங்கு பிறந்தவர்களும் இருக்கிறார்கள். அதற்குப்பிறகு மாத்தறைப் பிரதேசத்தில் பிறந்தவர்களும் இருக்கிறார்கள். இங்கு வந்தபோது ஒன்றுமில்லை. அவை எல்லாம் அழி;க்கப்பட்டு விட்டன. திம்புலாகல ஹாமதுறு ஆட்கள் தான் சின்ன வீடுகள் அமைத்துக் கொடுத்துள்ளார்கள். அதில்தான் இருக்கிறோம். மீன்பிடித் தொழில்கள் குறைவு இங்கு சிலர் கடைகள் போட்டு வியாபாரம் செய்கிறார்கள்” என்றும் அவர் கூறுகிறார்.

டப்ளியூ. ஏச்.ரத்னபால – புன்னைக்குடா

“இங்கு சிலருக்கு மின்சாரம் கிடைத்திருக்கிறது. சிலருக்கு அந்த வசதியும் இல்லை. கணவர் கடல் தொழிலுக்குச் செல்கிறார். 2008இல் இருந்து வந்து வந்து போனோம். பின்னர் 2010 மீண்டும் வந்து குடியேறினோம். கடல் தொழிலைத்தான் செய்கிறோம். வருமானம் ஓரளவுக்கு கிடைக்கிறது. அதன்மூலம் கிடைக்கின்ற வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறோம்” என்கிறார் புன்னைக்குடாவில் வதியும் சிங்களப் பெண்மணியான பி.ஜீ.யெல்லா.

பி.ஜீ.யெல்மா – புன்னைக்குடா

“எங்களுடன் தமிழ் மக்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். எங்களது காணிகளுக்கான ஆவணங்கள் சரியான முறையில் கிடைக்கவில்லை. மற்றும் படி பிரச்சினைகள் எதுவுமில்லை” என, புன்னைக்குடா பிரதேசத்தில் சிறிய கடை ஒன்றை அமைத்து வாழ்க்கை நடத்தும் 64 வயதுடைய ஏ.ஆரியவதி கூறினார்.

“இப்போதுள்ள பொருளாதார நெருக்கடிகள் பெரிய பிரச்சினைதான். யுத்தகாலம் என்றாலும், இப்போதானாலும் எம்மிடம் காசு இருந்தால் வாழலாம். எமது கை ஆடினால்தான் வாய் ஆடும். அந்தவகையில் ஜீவிப்பதற்கே பிரச்சினை இருக்கிறது. மற்றும்படி ஒன்றுமில்லை” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சிறிய கடையொன்றை நடத்திலரும் ஏ.ஆரியவதி – புன்னைக்குடா

இதேவேளை சிங்கள மக்களின் மீள் வருகை குறித்து 53 வயதுடைய தமிழரான செல்லத்துரை செல்வேஸ்வரன் கூறுகையில், “1984 வன்செயல் காலத்தில் இடம்பெயர்ந்து போய் இப்போது வந்திருக்கிறார்கள். சுனாமி அடித்தபிறகு 2005ல் அவர்கள் எங்களுக்கு விற்ற காணியிலேயே நாங்கள் இருக்கிறோம்.  10 பேர்ச் ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்று நாங்கள் வீடு கட்டியிருக்கிறோம். பிரச்சினையொன்றும் அவர்கள் எங்களுக்குச் செய்யவில்லை. வந்தவர்கள் சிறிய சிறிய கொட்டில்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். மின்சாரம் இல்லை, வசதிகள் இல்லை. பனங்காட்டுக்குள் இருந்து சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்” என்றார்.

நாட்டின் பல பகுதிகளிலும் பல்லினங்களும் இணைந்துவாழும் நிலை இருக்கிறது.சில பகுதிகளில் அவர்கள் தமக்குள்ளான புரிந்துணர்வுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ்கிறார்கள். தமிழர்- சிங்களவர்- முஸ்லிம்கள் என்று வேறுபாடு அவர்களுக்குள் இருப்பதில்லை. இது அவர்கள் ஒவ்வொருவரின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மற்றவர்கள் அறிந்துகொள்ளவும், அவர்களிடைய திருமண பந்தங்களை ஏற்படுத்தவும் ஏதுவாக இருக்கிறது. எனினும் மேலும் சில பகுதிகளில் இன்றும் பிரச்சினைகள் தொடர்ந்தவண்ணமுள்ளது.

செல்லத்துரை செல்வேஸ்வரன் – புன்னைக்குடா

1983களுக்குப்பின்னர் உருவான மோசமான சூழ்நிலை காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கின்ற திருகோணமலை மாவட்ட தமிழ்க் கிராமமான தென்னமரவாடி என அழைக்கப்படுகின்ற விவசாயம், கடல் வளம் என நிறைய வளங்களுடன் கூடிய தென்னவன் மரபு வாடி முக்கியமானதாகும். 1984ஆம் ஆண்டு ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக அப்பிரதேசத்தினை விட்டு வெளியேறிய தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வசித்து வந்திருந்தனர். 110 குடும்பங்கள் 2010ஆம் ஆண்டு மீளக் குடியேறினர். இப்போது 66 குடும்பங்களே வசிக்கின்றனர். காரணம் தொழில் மற்றும் கல்வி, மருத்துவ வசதிகளின்மையாகும். ஆனால், மீளக் குடியமர்ந்ததன் பின்னர் உருவாக்கியிருக்கின்ற சூழல் அவர்களை மீண்டும் அச்சத்துக்குள் தள்ளியிருப்பதாக உணர்கின்றனர்.

தென்னமரவாடியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான 56 வயதுடைய மகாலிங்கம் மங்களேஸ்வரி “எமது பிரதேசத்தில் இருக்கிற காணிகளையேனும் காப்பாற்றித் தருவதற்கு யாரேனும் உதவிகள் வழங்க வேண்டும். தொல்லியல் திணைக்களம், மற்றும் பாதுகாப்புத் தரப்பினரது அழுத்தங்கள் மூலம் எமது வயல் காணிகளை அபகரிக்க முனைகிறார்கள்;. அது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்குகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. நாங்கள் போய்ப் பேச முயன்றால் மீன்பிடிக்கு வந்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், தென்னை மரங்கள் நட்டு நிரந்தரமான குடியிருப்புக்கான வேலைகளில் ஈடுபடுவதைக் காணமுடிகிறது” எனக் கருத்துத் தெரிவிக்கிறார்.

தென்னமரவாடி மகாலிங்கம் மங்களேஸ்வரி

அதே நேரம், இடம்பெயர்வதற்கு முன்னர் எமது ஊர் சிறப்பாகவே இருந்தது. மீளக் குடியேறிய பின்னர் இங்கு எல்லாம் காடுமண்டிக் காணப்படுகிறது. கல்வி தொழில் என எல்லாவற்றுக்கும் பிரச்சினை இருக்கிறது. எங்களுக்கு இங்கிருப்பதக்கு முடியாமலிருக்கிறது. அதற்குள் உருவாகும் சிங்களவர்கள், முஸ்லிம்களின் வருகையும் நெருக்கடியாகவே இருக்கிறது. சட்டரீதியாக குடியேற்றங்கள் நடைபெறவில்லையென்றாலும் அத்துமீறிய வருகைகள் காணப்படுகின்றன. வசதிகளும் இல்லை. தொழில் செய்யவும் முடியாத நிலையென்றால் என்ன செய்வது என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

மீள்குடியேறலுக்குப் பின்னரான தமது கிராமத்தின் நிலை பற்றி கருத்துத் தெரிவித்த நாகராசா விதுர்சன் என்ற இளைஞன், “வடக்கையும் கிழக்கையும்  பிரிப்பது பறையனாறு, இரண்டையும் இணைக்கும் தமிழ்க் கிராமம் இந்தத் தென்னமரவாடியே, இந்தக்கிராமத்தினை அழித்துவிட்டால் தமிழர்பகுதியின் இணைப்பு இல்லாமல் போகும். திருகோணமலை, அனுராதபுரம், முல்லைத்தீவு பிரதேசத்தினை இணைக்கும் வீதி இன்னமும் புனரமைக்கப்படாது கிரவல் பாதையாகவே வைத்திருக்கிறார்கள். அந்த இடத்தில் ஒரு பெயர்ப்பலகைகூட போடப்படவில்லை. அதற்குக் காரணம் இந்த வீதியை புனரமைத்துவிட்டால் எமது கிராமத்தில் இங்கு மக்கள் தொகை கூடிவிடும் என்பதே”  என்கிறார்.

இது நல்லிணக்கதுடன் வாழும் மக்களை சில ஆட்சியாளர்கள் தமக்கான அரசியல் இலாபங்களுக்காகத் தூண்டிவிடும் ஒரு நிலையையே காட்டிநிற்கிறது. இதனால் தமிழ்- சிங்களம்- முஸ்லிம் என மூன்று இனங்களும் இணைந்துவாழும் சூழலை ஆபத்தான சூழலாக மாற்றுகின்ற திட்டமிடப்பட்ட செயற்பாடுகளாகும்.

தென்னமரவாடி நாகராசா விதுர்சன்

தமது பிரதேசத்தில் கந்தசாமி மலை என்ற பெயரில் இருந்த மலையை தொல்லியல் திணைக்களத்தினர் ஆளுகைக்குட்படுத்தில ‘ரஜகம விகாரை” என்று மாற்றியுள்ளதாகக் குறிப்பிடும் அவர், அதனை வைத்துக் கொண்டு சிங்களக் குடியேற்றங்களை கொண்டுவருவது அவர்களின் நோக்கம் என்றும் தெரிவிக்கிறார்.

தென்னமரவாடி கிராமம் மீன்பிடி, விவசாயம், பண்ணை வளர்ப்பு ஆகிய தொழில்களை மேற்கொள்ளும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசமாகும். இங்கு இப்போதைய நிலையில் சிங்களவர்களும், முஸ்லிம்களும் மீன்பிடி, விவசாயம், பண்ணை வளர்ப்புகளில் ஈடுபட முனைகிறார்கள். இதனால் தமிழர்களின் தொழில்துறைகள் பாதிக்கப்படுவதாகவும், பெரும்பான்மை மக்களின் குடியேறல்கள் அதிகரிப்பதனால் தங்களுக்கு அச்சம் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் பாரியதொரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இது நல்லிணக்கத்திற்கும், இனங்களுக்கு இடையிலான நல்லெண்ணத்திற்கும் பாரிய சவாலானதாகும். இவ்வாறிருக்கையில் வேறு சில தமிழ்ப் பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் சிங்களவர்களைக் குடியேற்றும் செயற்பாடுகளால் அதிகளவிலான தாக்கங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை.

1984களில் உயிர் அச்சம் காரணமாக தென்னமரவாடியிலிருந்த தமிழ் மக்கள் முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா போன்ற பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். யுத்த நிறைவுக்குப் பின்னர் மீண்டும் அங்கு குறிப்பிட்டளவான குடும்பங்கள் மீளக்குடியேறியிருந்தாலும், தொழில் மற்றும் பிள்ளைகளது கல்வி போன்ற காரணங்களினால் பல குடும்பங்கள் இப்பிரதேசத்திலிருந்து மீண்டும் ஏற்கனவே இருந்த இடங்களுக்குச் சென்றுள்ளன.

தென்னமரவாடியில் சிங்களவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக அமைத்திருக்கும் வாடி

“மீன்பிடித்தொழில் தற்காலிகமாக செய்கிறோம் என்று கூறிக் கொண்டு வருபவர்கள் தங்களுக்கான நிரந்தரக் குடியிருப்புகளை அமைத்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் ஒரு சில குடும்பங்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்துள்ளனர். ஆனால் அவர்களது குடும்பங்கள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் பலர் இங்கு வருகின்றனர். வந்து நிரந்தரமாக குடியிருக்க முனைகின்றர். அது தொடர்பில் பேச முயன்றால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. அவர்கள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பிடம் முறையிட முயன்றால் அவர்களுக்குச் சாதகமாகவே இருக்கிறது. அதனால் அச்சத்துடன் நாங்கள் வாழவேண்டிய நிலையே காணப்படுகிறது” என தென்னமரவாடி மக்கள் கூறுகின்றனர்.

சிங்களவர்களின் மீன்பிடி வள்ளம்

தமிழர்களது மனக்குறைகள் தொடர்பில் கருத்துப்பெற மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் சிங்களவர்களைச் சந்திக்க முயன்ற வேளை, அங்கு அவர்கள் யாரையும் சந்திக்க முடியவில்லை. அவர்களுடன் மீன்பிடியில் ஈடுபடும் கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர், “சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்தவரது மீன்பிடி வாடியே இது. நான் இங்கு வேலை செய்கிறேன். மீன்பிடிபடும் காலத்தில் இங்கு வந்து மீன்பிடியில் ஈடுபகிறோம். அவ்வாறான காலங்களில் இரவில் வந்து பகலில் சென்றுவிடுவார்கள்” என்று கூறினார்.

தென்னமரவாடி பிரதேசத்தில் சிங்கள மக்கள் குடியேறுகின்றமை, வாழ்வாதார அத்துமீறல்கள் தொடர்பில், “சாதாரண சிங்கள மக்கள் இவ்வாறான காரியங்களைச் செய்யவில்லை. அதற்குப் பின்னால் ஒரு அரசியல் பின்புலம் இருக்கிறது. இவ்வாறான அரசியல் பின்புலங்கள் தமிழர்களுடைய அரசியல் பின்புலங்களுடன் இணைந்து வேலை செய்யும் கட்டமைப்பு இதுவரை உருவாக்கப்படவில்லை. 2015ஆம் ஆண்டு இவ்வாறான வேலைத்திட்டங்களைத் தொடங்கியிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. அதனால் இப்போதுள்ள சூழ்நிலையில் அல்லது எதிர்காலத்தில் ஆரம்பிப்பதாக இருந்தாலும் விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவுதான்” என்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவிக்கிறார்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன்

சமாதான பன்மைத்துவ ரீதியிலான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை செபமாலை செபஜீவன், “குடியேற்ற அத்துமீறல்கள் தொடர்பான பிரச்சினைகளை அரசியல் கட்சிகள் ரீதியாக தீர்க்க முனைவதைவிடவும் சர்வமதங்களாக ஒன்றிணைந்து செயற்படுத்துவது சிறப்பானது. அரசியல் கட்சியாக போகும் போது எங்களுக்குள்ளேயே பிரச்சினைகளை உருவாக்கும். முயற்சிகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களின் போது தங்களுக்குள்ளேயே முன்னுரிமைப்படுத்தல் போன்ற விடயங்களால் அது பெரும் பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது. மதம் என்று வரும் போது மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கும். அரசியல் பக்கபலமாக இருக்கலாம். அவ்வாறானால் இவ்வாறான பிரச்சினைகளைச் சீர்செய்ய முடியும்” என்று கூறுகிறார்.

திருகோணமலையைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவர் கருத்து வெளியிடுகையில், (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) “மக்களது காணிகளை அபகரிக்கின்ற செயற்பாட்டுக்கெதிராக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம். அதனைவிடவும் ஒரேயொரு சாத்தியப்பாடு அரசியல் ரீதியாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு அந்தக் காணியை பெற்றுக் கொடுக்க வேண்டுமாக இருந்தால் பாராளுமன்றம் அல்லது ஜனாதிபதியிடம் பேசி தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம். சட்டரீதியாக இதற்குத் தீர்வைத் தேடமுயல்வதில் பிரயோசனம் எதுவும் இருக்காது” என்கிறார்.

குடியேற்றங்கள், குடியேறல்கள் சம்பந்தமாக நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று ஆராய்ந்ததன் அடிப்படையில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் காணப்படுகிறது. தமிழ், முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்தில் அன்னியோன்னியமாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

இதேவேளை திருகோணமலை – முல்லைத்தீவு எல்லைப்பகுதியான தென்னமரவாடி பிரதேசத்தில் சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியேற்றப்படுகிறார்கள்.  இவ்வாறான குடியேற்றங்கள், காரணமாக இனங்களுக்கிடையிலான நல்லுறவு சீர்குலைவதுடன்; நல்லிணக்க முரண்நிலைகள் ஏற்படுகின்றன.

வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேசத்தில் இருக்கின்ற பிரச்சினை ஓரளவுக்கு இணக்கமானதாக இருந்தாலும், திருகோணமலை – தென்னமரவாடி பிரதேசத்தில் சிங்களவர்களது அத்துமீறல்கள் நிறுத்தப்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தமிழ் மக்களிடம் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதாக அமையும்.

 

– எல்.தேவஅதிரன்