இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா இனியும் ஈடுபடக்கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத்தொடரில், இலங்கை இறுதிப்போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்காக அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தாக்கல் செய்துள்ளார். இதனடிப்படையில் இலங்கை மீதான விவாதம் மார்ச் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.
போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கான இலங்கையின் செயல்பாடுகள் மனநிறைவு தரவில்லை என்றும் ஆணையர் அவரது அறிக்கையில் கூறியுள்ளார். இலங்கையின் ஒப்புதலுடன் 2015-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை, கவலைக்கொள்ளும் அளவுக்கு மிகவும் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அதிபர், பிரதமர், அமைச்சர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவது கண்டிக்கத்தக்கது. இனியும் தாமதிக்காமல் தீர்மானத்தை செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அமைப்பு ரீதியில் நடத்தப்பட்ட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளைக் கொண்டு கலப்பு நீதிமன்றம் அமைப்பது கட்டாயமான தேவை. இத்தகைய குற்றங்களை விசாரிக்கும் வகையில் உள்நாட்டு சட்டங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும், குடிமக்கள் விவகாரங்களில் இருந்து ராணுவம் முழுவதுமாக விலக்கப்பட வேண்டும். இலங்கை அரசின் நடவடிக்கைகளை முழுமையாக செயலாக்க ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் நேரடி அலுவலகத்தை இலங்கையில் நிறுவ வேண்டும். போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையை விசாரிப்பதற்கான ரோம் உடன்படிக்கையில் இலங்கை உடனடியாக கையொப்பம் இடவேண்டும். இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் பரிந்துரைத்துள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்காமல் ஏமாற்ற இலங்கை அரசு நடத்தும் நாடகம் மனித உரிமை ஆணையர் அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது. இதற்கு மேலும் இலங்கை அரசின் ஏமாற்று சதிகளுக்கு சர்வதேச சமூகம் பலியாகக் கூடாது. 2015-ம் ஆண்டு மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், ஒருசிலவற்றை மட்டும் நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
மாறாக, மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகளை தீவிரமாக்குவதுடன், ஐ.நா பொது அவைக்கும், பாதுகாப்பு மன்றத்துக்கும் இலங்கை விவகாரத்தை கொண்டு செல்ல வேண்டும்.
குறிப்பாக, இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா இனியும் ஈடுபடக்கூடாது. மாறாக, நீதியின் பக்கம் நிற்க முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்களை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தும் இலங்கை அரசை கண்டிக்கும் வகையிலான தீர்மானத்தை இந்திய அரசே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைப்பது உள்ளிட்ட அனைத்து பரிந்துரைகளையும், உரிய காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதற்கான செயல்திட்டத்தையும் இந்திய அரசு அதன் தீர்மானத்தில் முன்வைக்க வேண்டும்.
கடந்த காலங்களில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் போன்ற பன்னாட்டு அமைப்புகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இத்தகைய சூழலில், மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்களை இலங்கை அரசு செயல்படுத்துவதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தொடர்ச்சியாக கண்காணிப்பதையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித உரிமைப் பேரவையில் விவாதிப்பதையும் உறுதி செய்யும்படி இந்தியத் தீர்மானம் வலியுறுத்த வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக, இலங்கை இறுதிப்போரில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்குற்றங்களுக்கு நீதி பெற்றுத்தரும் நோக்குடன், இலங்கை சிக்கலை ஐ.நா பொது அவையின் மூலம் ஐ.நா பாதுகாப்பு மன்றத்துக்கு கொண்டு செல்லும்படியும் ஐ.நா மனித உரிமை பேரவையை இந்தியா கோர வேண்டும். ஈழத்தமிழர்கள் இந்தியாவை தந்தை நாடாக கருதுவதாலும், ஈழத்தமிழரை தொப்புள் கொடி உறவாக இந்தியத் தமிழர்கள் கருதுவதாலும் அவர்களுக்கு நீதிபெற்றுத் தருவதற்கான தார்மீக கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு. ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் பொருத்தமான தீர்மானத்தைக் கொண்டு வந்து நட்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றுவதன் மூலம் இந்த கடமையை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


