தமிழரின் தனிப்பெருங் கட்சி ‘சூம்’ வழியாக தலைவரைத் தேடுகிறது!

99 0

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைக் கண்டுபிடிக்க புலம்பெயர் கிளைகளுடன் ‘சூம்’ வழியான கூட்டங்கள் நடைபெறுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரனும், சுமந்திரனும் கதிரைப் போட்டியில் களத்தில் குதித்துள்ளதால் கட்சி அடுத்த கட்டப் பிளவை எதிர்நோக்குகிறது. 

இலங்கை அரசியல் பற்றி இன்றைய நாட்களில் பேசுபவர்கள் தமிழர் பிரச்சனையைத் தவிர்த்து, ரணிலின் அரசாட்சி – அவரின் தந்திரோபாய கெட்டித்தனம், அவர் விரும்பும் ஜனாதிபதி தேர்தல் என்று அவரை மையப்படுத்தியே விமர்சிப்பது மேலோங்குகிறது.

சிங்கள அரசியல் தலைவர்களுக்குள் ரணிலை முடிக்குரியவராகச் சித்தரிப்பதற்கு பல காரண காரியங்களை முன்வைக்கின்றனர். பொருளாதார நெருக்கடியான காலத்தில் பிரதமராகி, ஜனாதிபதியாகி குறுகிய காலத்தில் நாட்டை மீட்டவர் என்று தற்காலிகமாக குறிப்பிடுவது பொருத்தப்பாடுடையது.

ஆனால், தமிழரின் அரசியல் அபிலாசை எனப்படும் இனப்பிரச்சனைத் தீர்வை, உணவுக்கு தொட்டுக்கொள்ள பயன்படுத்தப்படும் ஊறுகாய் போன்று பட்டும்படாமலும் கச்சிதமாக அதனை தடவிச் செல்வதை காணமுடிகிறது. தொல்பொருள் திணைக்களம் தனது கைகளில் தூக்கியிருக்கும் மதவாதம், இனப்பிரச்சனையை மறைத்து அதனை  மதப்பிரச்சனையாக்கி தமிழர் தாயகமெங்கும் இனத்துவ மோதலை உருவாக்கி வருகிறது.

இந்த விவகாரத்தில் நேரடியாக களமிறங்கி மக்களுக்குத் தலைமை தாங்க வேண்டியவர்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வி முக்கியமானது. இலங்கை தமிழர்களின் அரசியல் தலைமையாக இன்றும் பார்க்கப்படுவது தமிழரசுக் கட்சியே. நாடாளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சிக்குக் கிடைக்கும் கூடிய ஆசனங்களைப் பொறுத்தே இந்த முடிவு எட்டப்படுகிறது.

தமிழர்களின் முதலாவது அரசியல் கட்சியான அகில இலங்கை தமிழ்க் காங்கிரசிலிருந்து பிரிந்தவர்களால் உருவாக்கப்பட்டது தமிழரசுக் கட்சி. 1949ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி கொழும்பின் மருதானையிலுள்ள அரசாங்க குமாஸ்தாக்கள் சேவைச் சங்க மண்டபத்தில் ஆரம்ப மாநாடு அதன் ஸ்தாபக தலைவர் திரு. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. அவ்வேளை அவர் நிகழ்த்திய உரையின் முக்கிய பகுதி பின்வருமாறு அமைந்திருந்தது:

‘நாம் விடுதலை பெறுவதற்கு ஒரு சுதந்திர தமிழரசை நிறுவுவது இன்றியமையாதது என்பது எமது திடமான நம்பிக்கை. பழைய கால சரித்திரத்தை தெளிவாக நன்றாக ஆராய்ந்து பார்த்தால் தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டிலே இப்போது எப்படியான நிலைமைகளுக்கிடையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கூர்ந்து நோக்கினால், இதுதான் ஒரேயொரு வழி – வேறு எந்தவிதமான பரிகாரமும் கிடையாது”.

இவ்வாறு குறிப்பிட்ட திரு. செல்வநாயகம் அவர்கள் தமது உரையின் பிற்பகுதியில், ‘ஒரு சுயாட்சித் தமிழ் மாகாணமும் ஒரு சுயாட்சிச் சிங்கள மாகாணமும் அமைத்து, இரண்டுக்கும் பொதுவானதோர் மத்திய அரசாங்கமுள்ள – சமஸ்டி அரசு – இலங்கையில் ஏற்பட வேண்டும். தமிழ் பேசும் தேசிய இனம், பெரிய தேசிய இனத்தால் விழுங்கப்பட்டு அழியாதிருக்க இவ்வித சமஸ்டி ஏற்படுவது அவசியமாகின்றது” என்று குறிப்பிட்டார்.

ஏழரைத் தசாப்தங்கள் ஆகியும் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அடுத்த ஆண்டில் தமிழரசுக் கட்சியின் எழுபத்தைந்தாவது ஆண்டு விழா நடைபெறவுள்ளது. கடந்த 74 ஆண்டுகளில் – 1972ல் தமிழர் ஐக்கிய முன்னணி, 1976ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி – அதன் அடையாளமாக வட்டுக்கோட்டை தீர்மானம், 1977 தேர்தலில் தனிநாடுக்கான மக்கள் ஆணை என்று பயணித்து, விடுதலைப்புலி நிர்வாக காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் சங்கமித்து இன்று யாவும் இழந்து மீண்டும் தனிக்கட்சியாக நிற்கும் பரிதாப நிலைக்கு தமிழரசுக் கட்சி வந்துள்ளது.

தமிழ் காங்கிரஸ் உருவானபோது அதன் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தை இந்து மதத்தவர் என்று எவரும் நோக்கவில்லை. தமிழரசுக் கட்சி உருவானபோது அதன் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை ஒரு கிறிஸ்தவர் என்று மக்கள் பார்க்கவில்லை. மதங்களைக் கடந்து தமிழ் மக்களின் அரசியல் விடுதலையை பொறுப்பேற்ற உன்னத தலைவர்களாகவே இவர்களைப் பார்த்தனர்.

தமிழரின் தந்தை என மதிக்கப்படும் செல்வநாயகம் அவர்களின் 125வது ஜனன தினம் இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது இனவிடுதலை அர்ப்பணிப்புக்கான நன்றி கூறும் நிகழ்வாக இடம்பெறும் இவ்வைபவத்தைக்கூட யாழ்ப்பாணத்தில் ஒருங்கமைந்த வைபவமாக நடத்த முடியாத நிலையில் தமிழரசுக் கட்சி காணப்படுகிறது. இதற்குக் காரணம் குறுநில மன்னர்களாக அங்கு பலர் தம்மைத் தாமே முக்கியப்படுத்தி அரசியல் செய்வது.

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை மறந்து அடுத்த தலைவர் யார், தற்போதைய தலைவரை எவ்வாறு இறக்குவது, யாருக்கு யார் ஆதரவு என்ற விடயங்களே இன்று கட்சி வட்டத்துக்குள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலின்போது இணைபிரியா நண்பர்களாக வாக்குக் கேட்ட சிவஞானம் சிறீதரனும், சுமந்திரனும் இப்போது இரு தரப்பாக பிரிந்துள்ளனர். தேர்தல் காலத்தில் சிறீதரன் அணியின் இரண்டாவது வாக்கை கேட்டுப்பெற்று வெற்றி பெற்ற சுமந்திரன், அவ்வேளையில் சிறீதரனை கட்சியின் தலைவராக்குவதாக வாக்குறுதி கொடுத்தார் என்பது இப்போது பரகசியமாகியுள்ளது.

அதனை மறந்து இப்போது சிறீதரனுக்குப் போட்டியாக சுமந்திரன் களத்தில் இறங்கியுள்ளதை ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. உள்நாட்டில் கட்சியின் பிரதிநிதிகள் கூடி முடிவெடுக்க வேண்டிய தலைவர் தெரிவு விவகாரம் புலம்பெயர்ந்து வாழும் கட்சி ஆதரவாளர்களின் கைகளுக்குச் சென்றுள்ளது.

தமிழரசுக் கட்சியின் கிளை அமைந்துள்ள மேற்கு நாடொன்றின் பிரதிநிதிகளுடன் இது தொடர்பாக இரண்டு ஷசூம்| கூட்டங்கள் அந்தரங்கமாக நடத்தப்பட்டுள்ளது. முதலாவது கூட்டம் சுமந்திரனோடு நடத்தப்பட்டது. இரண்டாவது கூட்டம் தமிழரசின் மூத்த துணைத்தலைவர் திரு.சி.வி.கே.சிவஞானத்துடன் நடத்தப்பட்டது. இக்கூட்டங்களின் முக்கிய பேசுபொருள் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜாவை எவ்வாறு பதவியிலிருந்து இறக்குவது. அடுத்தது, சுமந்திரனை எவ்வாறு தலைவராக்குவது.

இதற்காக கட்சியின் மாநாட்டை விரைவாக நடத்துவதற்கு எத்தனை லட்சம் ரூபாவையும் தாங்கள் தரத்தயாராக இருப்பதாக புலம்பெயர் கிளையின் முக்கிய பிரமுகர் வாக்குறுதி அளித்ததும் தெரியவந்துள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் சுமந்திரனை நோக்கி – ழநெ அயn யசஅல ஆக செயற்பட்டு கட்சியை அழிக்க வேண்டாமென்று சூடாக அவருக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் நடைமுறைகளின்படி தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள் வடக்குக்கும் கிழக்குக்கும் ஒவ்வொன்றாக இருக்க வேண்டுமென்பது. வடக்கிலிருந்தே தலைவர் தெரிவு செய்யப்படுவாரென்றால் கிழக்கிலிருந்து செயலாளர் தெரிவு செய்யப்பட வேண்டும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்த தமிழரசுக் கட்சி இப்போது அதன் தலைவர் தெரிவில் மேலும் பல பிளவுகளை எதிர்பார்ப்பதாக கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.

இதைத் தவிர்ப்பதற்கு கிழக்கு மாகாணத்தின் கட்சிப் பிரமுகர் ஒருவர் தமது சகபாடிகளுடன் பகிர்ந்த கருத்து முக்கியமானது. கட்சியின் தலைமைப் பதவி கட்டாயமாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரியது என்றல்ல. கட்சியை ஒற்றுமையாக ஒழுங்காக கட்டுப்பாடாக நடத்தக்கூடிய ஒருவரே தலைவராக வேண்டும். தற்போது கட்சியின் மூத்த துணைத்தலைவராக இருக்கும் திரு.சி.வி.கே.சிவஞானத்தை தலைவராக்கினால், இப்போது தலை தூக்கியிருக்கும் பதவிப் போட்டி மோதல்களை தடுக்கலாமென்று அவர் கருத்து வெளியிட்டார்.

பல நிர்வாக பதவிகளை அரச சேவையில் வகித்தவர் சி.வி.கே.சிவஞானம். பலரையும் இணைத்து செயற்படுத்தக்கூடியவர். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழான இடைக்கால நிர்வாகத் தலைவராக விடுதலைப் புலிகளால் பெயரிடப்பட்டவர். வயதாலும், அரசியல் அறிவாலும் மூத்தவர். அவரை கட்சியின் தலைவராக நியமித்தால் பல பிரச்சனைகள் தவிர்க்கப்படுவது மட்டுமன்றி எதிர்நோக்கப்படும் கட்சிப் பிளவும் காப்பாற்றப்படும் என்பது அவரது கருத்து.

உள்நாட்டில் தகுதியான ஒருவர் தலைமைப் பதவிக்கு இருக்கும்போது எதற்காக ஷசூம்| வழியாக தலைவரைத் தேட வேண்டும்?

பனங்காட்டான்