கோரிக்கைகளை செவிமடுத்து மக்களின் காணிகளை வழங்க முன்வந்தமைக்கு நன்றி

236 0

தங்களுடைய கோரிக்கைகளை செவிமடுத்து மக்களின் காணிகளை வழங்க முன்வந்தமைக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அதிமேதகு ஜனாதிபதி அவர்களே,முல்லைத்தீவு மாவட்டக் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக பாராளுமன்ற உறுப்பினர் சிலருடன் கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை தங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் சந்திப்புக்கு நன்றி தெரிவிப்பதற்காக இதனை எழுதுகின்றேன்.உடன் நடவடிக்கை மேற்கொண்டமைக்காக எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பின்வரும் விடயங்களைத் தங்கள் கவனத்திற்காக தெரிவிக்கின்றேன்.

கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, ஆவணங்கள் மூலம் உரிமையை உறுதிப்படுத்தியவர்களுக்கு 54 காணிகள் கையளிக்கப்பட்டு விட்டன.கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்பு காணிகளை உடமை கொண்டிருந்த வேறு 30 பேரிடம் உரிய காணி அனுமதிப்பத்திரங்கள் இருக்கவில்லை.அவர்களும் இடம்பெயர்விற்கு முன்பு இக்காணியை உடைமை கொண்டிருந்தவர்கள் என்ற வகையிலும் அங்கு நிலவிய சூழ்நிலை காரணமாக காணி உரிமைப் பத்திரங்களை பெற முடியாது போனமையினாலும் அவர்களும் அக்காணிகள் வழங்கப்படுவதற்கு உரித்துடையவர்களே முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோர் தேவையான தகவல்களை பெறக்கூடியவர்களாக இருப்பார்கள்.

குறித்த 30 பேரும் காணி அற்றவர்களாக இருந்தால் மற்றும் ஏற்கெனவே குறித்த காணியின் உடமையைக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டுக் காணியின் உடமை கையளிக்கப்பட வேண்டும்.இந்த காணியில் இருந்த வீடுகள் அழிக்கப்பட்டு விட்டன. இம்மக்களுக்கு வீடுகளும் ஏனைய வசதிகளும் வழங்கப்படவேண்டும்.

புதுக்குடியிருப்பு விடயத்திற்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. 3 கட்டங்களாக இக் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும், முதலாவது கட்டம் மார்ச் மாதம் 4ம் திகதியும் இரண்டாம் மூன்றாம் கட்டங்கள் இன்னும் சில மாதங்களிலும் கையளிக்கப்படவுளளன. இந்த உறுதிப்பாடு காப்பாற்றப்பட வேண்டும்.

கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு காணிகள் கையளிக்கப்பட்டுள்ளதன்படி, தங்களது காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டமையினால் ஆர்ப்பாட்டம் நடாத்திய மக்கள் அவ் ஆர்ப்பாட்டங்களை நிறுத்திக் கொண்டுள்ளனர்.குறிப்பாக இந்தக் காணிகளை விரைவாகக் கையளிப்பதற்காகத் தாங்களும், சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் தங்களுடன் உரையாடியபோது குறிப்பிட்ட கிளிநொச்சி மகாவித்தியாலயத்துக்குரிய காணி தொடர்பாகவும், 142 பேர்ச் காணியைப் பாடசாலைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் காணிகளை ஆயுதப்படையினர் கையகப்படுத்தி வைத்திருப்பதாகத் தெரிகின்றது.கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கிட்டத்தட்ட 2500 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். குறிப்பாக ஆரம்பக் கல்விப் பிரிவு உட்பட இப்பாடசாலையில், இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது. இப்பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் ஒன்றும் அவசரமாகத் தேவைப்படுகின்றது.

இந்த பாடசாலைக்கு நான் விஜயம் செய்து அதன் கஷ்டமான நிலைமையை கண்டுள்ளேன். மிகுதிக் காணிகளும் இப்பாடசாலைக்கு விரைவில் கையளிக்கப்பட வேண்டும்.எனவே, மிகுதிக் காணிகளையும் கிளிநொச்சி மகாவித்தியாலய நிர்வாகத்தினருக்கு கையளிக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டால் மிகவும் நன்றியுடையவனாய் இருப்பேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.