ஐக்கியமக்கள் சக்தி மீதான பிடியை இழக்கிறாரா சஜித்?

67 0

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி  பலவீனமாவதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள எதிர்கட்சிதலைவர் சஜித்பிரேமதாச  நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இரவுஉணவிற்காக அழைத்திருந்தார்.

பத்தரமுல்லயில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சிதைவுறும் நிலையில் உள்ள கட்சியை இழுத்துப்பிடித்து வைத்திருப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்த சந்திப்புஇடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்ந்தும் கட்சியிலிருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் என இந்த சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்று சிரேஸ்ட உறுப்பினர்களான கபீர் ஹாசிம் ஹர்சா சில்வா எரான்விக்கிரமரட்ண ஆகியோர்அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்காக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள தருணத்தில் சஜித் பிரேமதாச தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளார். என இரண்டு தரப்பிற்கும் நெருக்கமான  சிரேஸ்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூவரும் ஜனாதிபதியின் பொருளாதார கொள்கைகளிற்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு ஹர்சாடிசில்வா இணங்கினால் அமைச்சரவை மாற்றத்தின் போது அவர் கொள்கை அமுலாக்கல் அமைச்சராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் இதன்போது நிதியமைச்சின் சில பொறுப்புகள் கொள்கை அமுலாக்கல் அமைச்சின் கீழ் வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரான் விக்கிரமரட்ணவும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளார்,ஆனால் அவர் அமைச்சு பொறுப்பை கோரவில்லை.

இதேவேளை ஹபீர்ஹாசிமிற்கு அமைச்சு பொறுப்பை வழங்குவது குறித்து ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்கட்சி தலைவரின் மனைவி மற்றும் சகோதரியின் தலையீடுகள்காரணமாக தொடர்ச்சியாக ஒரு நிலைப்பாட்டை பேண முடியவில்லை இதன்காரணமாகவே சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேற சிந்திக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சியின் குழுகூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் இந்த மூவரினால்  பின்னர் மாற்றப்படுகின்றன இது  கட்சியின் உறுப்பினர்களிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சி உறுப்பினர்களின் தீர்மானங்கள் முன்னெடுக்கப்படுவதில்லை கட்சியை எதிர்க்கட்சி தலைவரும் அவரது மனைவியும் தங்கையும் அனேகமாக வழிநடத்துவதால் அவர்களே தீர்மானங்களை எடுக்கின்றனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.