தமிழர்களின் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்க நாம் எந்த எல்லைக்கும் போகத் தயார்

143 0

தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களைப் பாதுகாப்பதற்கு தாம் எந்த எல்லைக்குப் போகவும் தயாராக உள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராங்களில் ஒன்றான முல்லைத்தீவு – கருநாட்டுக்கேணியில் தமிழர்களின் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளும் முயற்சிஒன்று 03.04.2023இன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதித் தமிழ் மக்களும், ரவிகரனும் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் பூர்வீக எல்லைக் கிராமமான கருநாட்டுக்கேணித் தமிழ் மக்களின் குடியிருப்புக்காணிகளை ஆக்கிரமிப்புச் செய்து அங்கு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளும் முயற்சிகள் தற்போது முனைப்புப் பெற்றுள்ளன.

குறிப்பாக கருநாட்டுக்கேணிப் பகுதியிலுள்ள பொலிஸ் நிலயத்தைச் சூழவுள்ள, தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரித்து அங்கு 180சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கான முயற்சிகள் இங்கு இடம்பெறுவதாக அறிகின்றோம்.

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளரான கீர்த்தி தென்னக்கேன் என்னும் நபருடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையே இந்த சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தப் பகுதிகளிலுள்ள காணிகள் அனைத்திலும் எமது தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்தனர்.

இந்நிலையில் கடந்த 1973மற்றும், 1979ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட காணி உத்தரவுப் பத்திரங்கள் அவர்களுடைய கைகளிலே இருக்கின்றன.

இந்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி எனப்படுகின்ற இந்த எல்லைக் கிராமங்கள், பூர்வீக பழந்தமிழ் கிராமங்களாகும்.

இங்கு வாழ்ந்த மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு இந்தப் பகுதிகளிலிருந்து சிங்கள இனவெறி இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டனர்.

அவ்வாறு வெளியேற்றப்பட்டபின்னர் இங்குள்ள தமிள் மக்கள் நெற்பயிற்செய்கைக்காக பயன்படுத்திய நீர்ப்பாசனக்குளங்கள் அவற்றின் கீழான வயல் நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களமக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந் நிலையில் தமிழ் மக்கள் 1984ஆம் ஆண்டுக்குமுன்னர் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்திய உந்திராயன் குளம், மறிச்சுக்கட்டிக்குளம், ஆமையன்குளம் ஆகிய குளங்களையும் அவற்றின் கீழான வயல் நிலங்களையும் தற்போது சிங்களவர்களே பயன்படுத்தி வருகின்றார்கள்.

இதுதவிர தமிழ் மக்களுடைய மானாவாரி விவசாய நிலங்கள் பலவும் தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவருகின்றது.

அத்தோடு கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணித் தமிழ்மக்கள் தமது மானாவாரி விவசாய நிலங்களில் பயிற்செய்கை நடவடிக்கை செய்யும்போது மகாவலி அபிவிருத்தி அதிகிரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்களால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. சிங்கள மக்களாலும் கூட இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றது.

எமது எல்லைக்கிராமங்களிலுள்ள தமிழ் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும்பான்மையினத்தவர்களால் தாக்கப்படுவதும், தமிழர்ளுடைய கால்நடைகள் திருடப்படுகின்ற சம்பவங்கள் கூட ஒருபுறம் இடம்பெறுகின்றன.

இவ்வாறாக எல்லைக்கிராமங்களிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் பலவித அழுத்தங்களுக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர்.

இவ்வாறான சூழலில் தற்போது தமிழ் மக்களின் குடியிருப்புக்காணிகளில் கூட சிங்களவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முனைப்புப் பெற ஆரம்பித்துள்ளன.

இவ்வாறான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளின் ஊடாக, இங்கு வாழும் ஆதிக்குடிகளான தமிழ் மக்களை முற்றுமுழுதாக அப்புறப்படுத்திவிட்டு, தமிழர்களின் எல்லைக் கிராமங்களில் சிங்களவர்களை குடியேற்றவேண்டும்  என்ற நோக்குடனேயே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது. எமது தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களை பாதுகாப்பதற்கு நாம் எந்த எல்லைக்கும் போகத் தயாராக உள்ளோம் – என்றார்.