அரசு விழாவுக்கான பேனரில் ‘தண்டனை கைதி’ சசிகலா படம் – பொதுமக்கள் கொதிப்பு

304 0

மதுரை புதுாரில் நடந்த, ‘அம்மா’ திட்ட முகாமிற்காக பஸ் ஸ்டாண்டை மறைத்து பந்தல் அமைத்து, உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்காமல் ரோட்டோரங்களில் பேனர் வைத்த அ.தி.மு.க.,வினரின் செயலை கண்டு பொதுமக்கள், வியாபாரிகள் எரிச்சல் அடைந்தனர்.

அரசின் சமூக பாதுகாப்புத் துறை சார்பில் ‘அம்மா’ நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

315 பேருக்கு 6.47 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இவ்விழாவிற்காக, பொதுமக்களை பாதிக்கும் வகையில் பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து பந்தல் அமைத்தும், கடைகளை மறைத்து பேனர் வைத்தும் பொதுமக்களின் வயிற்றெரிச்சலை அ.தி.மு.க.,வினர் ‘சம்பாதித்தனர்’.

பொதுமக்கள் கூறியதாவது : பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பால், பஸ்கள் உள்ளே வந்து செல்ல முடியவில்லை.

அரசு விழா, கட்சிகள், பொது நிகழ்ச்சிகள் எதற்கும் இப்பகுதியில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், 3 ஆண்டுகளாக புதுாரில் யாரும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கவில்லை.

தற்போது அரசு விழா என்ற பெயரில், கட்சி விழாவிற்கு அ.தி.மு.க.,வினர் இதுபோல் கடைகளை மறைத்து போர்டுகள் வைத்துள்ளனர்.

பிளக்ஸ் போர்டு வைக்க அனுமதியும் பெறவில்லை. அரசு விழா எனக் கூறும் அ.தி.மு.க.,வினர், சிறையில் உள்ள சசிகலா படத்தை பிளக்ஸ் போர்டில் அச்சிட்டது, அதிகாரிகளுக்கு தெரியாதது வேடிக்கையாக உள்ளது, என்றனர்.