வெடுக்குநாறி மலை விவகாரம்: வன்மையாகக் கண்டிக்கிறேன் – அனந்தி!

119 0

நாங்கள் செல்ல முடியாத வவுனியா – வெடுக்குநாறி மலையில் திட்டமிட்ட வகையில் எமது வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவதை இந்து என்ற வகையில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (26.03.2023) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் காலங்காலமாகத் தமிழர்களுடைய சிவன் ஆலயமாக இருந்திருக்கின்றது.அந்த ஆலயத்தைப் பரம்பரை பரம்பரையாக வழங்கியவர்கள் இன்றைக்கும் அந்த ஆலயத்தின் அருகில் வசிக்கின்றார்கள். ஆனால், அங்குத் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தவர்களை தொல்லியல் திணைக்களம் தனது சொல்வாக்கினூடாக அந்த ஆலயத்தில் எவரும் செல்ல முடியாது அல்லது மலையேற முடியாது என நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் நாங்களும் அந்த ஆலயத்திற்குச் சென்று வணங்கி உள்ளோம். ஆனால் தற்போது அங்கு இருந்த சிவலிங்கம் இடித்து வீசப்பட்டுள்ளதுடன், சூலங்களும் பிடுங்கி வேறு இடத்தில் வீசப்பட்டுள்ளன.

நாங்கள் செல்ல முடியாத வெடுக்குநாறி மலையில் திட்டமிட்ட வகையில் எமது வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவதை இந்து என்ற வகையில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேவேளை, குருந்தூர் மலையில் இந்து ஆலயம் இருந்த இடத்தில் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி பௌத்தர்கள் விகாரையை கட்டியுள்ளார்கள்.

அங்கு எந்த விதமான செயற்பாடுகளையும் செய்ய முடியாத நிலையில் நாம் உள்ளோம். அதே நேரத்தில், அங்கு தான் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி பிக்கு ஒருவருடைய உடலையும் தகனம் செய்திருந்தார்கள். அதே நேரத்தில் நாவற்குழியில் ஒரு விகாரையை கட்டி அந்த விகாரையை இராணுவ தளபதி சவேந்திரசில்வா திறந்து வைத்ததையும் ஊடகங்கள் வாயிலாகப் பார்த்திருந்தோம்.

காங்கேசன்துறை குரு வீதியில் பௌத்தர்கள் எவருமே இல்லாத இடத்தில் ஒரு விகாரையை கட்டியுள்ளார்கள். மக்கள் அனைவரையும் அடித்து விரட்டி விட்டு அங்கு அந்த விகாரையை கட்டியிருக்கிறார்கள். அத்துடன், நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டை தமிழர்களது பூர்வீகம் என்று பேசிக் கொண்டிருக்கின்ற வேளையில் அது பௌத்த இடம் எனக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை நாங்கள் சமூக ஊடகங்கள் ஊடாக பார்த்திருக்கின்றோம்.

யுத்தம் முடிந்து 13 வருடங்கள் ஆகியும் இனப்பிரச்சினைக்கான ஒரு அரசியல் தீர்வை நாங்கள் பெற்றுத் தருமாறு கோருகின்றோம் ஆனால் அது வழங்கப்படவில்லை. விடுதலைப் போராட்டத்தை அமெரிக்கா, இந்தியா, பிருத்தானியா ஆகிய நாடுகள் அழித்தன. 2020ஆம் ஆண்டில் சம்பந்தர் கூட பாராளுமன்ற இதனை ஆக்ரோஷமாகக் கூறியிருந்தார்.

இதுவரை நமக்கான தீர்வு பெறாமல் இருக்கின்ற நிலங்களை அபகரிக்கின்ற செயற்பாடு தான் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தான் எமது அரசியல் தலைமைகள் எமக்கான ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்ற நோக்கத்தில் மென்போக்கான பயணத்தை மேற்கொள்கின்றனர். இன்றைக்கு நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்ற இந்த இடத்தில் கூட நாளைக்கு ஒரு விகாரை வந்துவிடும். அது கூட ஒரு ஆச்சரியமான செயல்பாடு இல்லை.

IMF இல் கடனை வாங்குகின்ற போதும் எமது இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வினை பெற்றுக் கொடுப்போம் என்று கூறினாலும், இன்றைக்கு ஐக்கிய நாடுகள் சபை நடந்து கொண்டிருக்கின்ற போதும் நாங்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்ட தரப்பாக இருக்கின்றோம் எனப் பேசிக்கொண்டு இருக்கின்ற வேளை இவ்வாறு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் உலகத் தமிழர்கள் அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.