சிவலிங்கம் புதருக்குள் வீசப்பட்டது மிக மிலேச்சத்தனமான செயல்: வி.மணிவண்ணன்

80 0

வவுனியா – ஒலுமடு வெட்டுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டதும் சிவலிங்கம் புதருக்குள் தூக்கி வீசப்பட்டதும் மிக மிலேச்சத்தனமான செயலாகும் என முன்னாள் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரிய வாழ்விடங்களையும் வழிபாட்டு இடங்களையும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமிடப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியே இதுவாகும்.குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைகளையும் உதாசீனப்படுத்தி பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகையில் தமிழ்ர்களின் பண்பாட்டு பாரம்பரிய வழிபாட்டுத்தலமாக வெட்டுக்குநாறி மலையில் இருந்த ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரங்கள் தகர்த்தெறியப்படுகின்றன.ஒரு இனத்தின் மொழியையும் அதன் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் அழித்தால், அவ்வினம் தானாகவே அழிந்துவிடும் என்பதற்கு உட்பட்டே இவ்வாறான பண்பாட்டு இன அழிப்பு நடவடிக்கைகள் எமது மண்ணில் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

இதற்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவிப்பதுடன் எமது இனத்தின் இருப்பினை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதனை காலம் உணர்த்தி நிற்கின்றது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.