மக்கள் தேர்தலை கோரவில்லை

203 0

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை கொண்டு தேர்தலை நடத்துவதற்கு செலவழித்து நாட்டை குழப்புவதை விடுத்து இன்னும் சிறிது காலம் பொறுத்து தேர்தலுக்கு செல்வதே நல்லது. இப்போது தேர்தலுக்கு அவசியம் இல்லை. நாட்டு  மக்கள் தற்போது தேர்தலை கோரவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அநூராதபுரத்தில் நேற்று (26) நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி மற்றும் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கு போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையை எதிர் நோக்கியுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியம் ஆதரவை வழங்கியுள்ளது. இந்திய அரசாங்கமும்  எமக்கு ஆதரவு வழங்கியுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக சில தரப்பினர் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை நிறுத்துவதற்கு  முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இந்நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முயற்சிகள் காரணமாக குறுகிய காலப்பகுதிக்குள் கடனை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம்  முன்வந்துள்ளது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை கொண்டு தேர்தலை நடத்துவதற்கு செலவழித்து நாட்டை குழப்புவதை விடுத்து இன்னும் சிறிது காலம் பொறுத்து  தேர்தலுக்கு செல்வதே நல்லது. இப்போது தேர்தலுக்கு அவசியம் இல்லையல்லவா? நாட்டின் மக்கள் தற்போது தேர்தலை கோரவில்லை என்றார்.