சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எண்ணம் தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையலாம்!

180 0

சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ் மக்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் கபில்ரன் போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடனடியாக நீக்க வேண்டும், மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் தொடர்பாக பொதுக் கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (25.03.2023) இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்தமுதலிகே தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களுக்காக போராடியபோது அடித்து ஒடுக்கப்பட்டார்கள்.அதன் ஓர் அங்கமாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

எனவே இதன்மூலம் எமது எண்ணங்கள் மற்றும் செயற்பாடுகள், தேடல்களும் மௌனிக்கப்பட்டு, ஓர் மௌனிக்கப்பட்ட சமூகமாக எங்களை முடக்கி விட்டார்கள்.இந்த எண்ணம் முறியடிக்கப்பட வேண்டும்.

நாங்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றோம். 30 வருடங்களுக்கு முன்னர் எனது தந்தை போராடினார், 30 வருடங்களுக்கு பின்னர் நான் போராடுகிறேன், இனி எனது பிள்ளைகளும் போராடுவார்கள்.

ஆகவே போராட்டமே எமது வாழ்க்கையின் தேடலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.