வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் தாக்குதலுக்குள்ளான இருவர் வைத்தியசாலையில் அனுமதி

76 0

வவுனியாவில், மதுபோதையில் சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப் படையினரால் இருவர் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் நேற்று (25.03.2023) பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான இருவரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கனகராயன்குளம் – விஞ்ஞானகுளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சச்சிதானந்தன் சதாநந்தன், மரையடித்தகுளம் – செங்கராத்திமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சிற்றம்பலம் கேதீஸ்வரன் ஆகிய இருவரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வவுனியா – மரையடித்தகுளம், செங்கராத்திமோட்டை பகுதியில் பற்றைக்காடாக இருந்த எமது காணியினை துப்பரவு செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த விசேட அதிரடிப்படையினர் குறித்த காணி வனஇலாகாவிற்கு சொந்தமானது என தெரிவித்தனர்.

எனவே காணியினை துப்பரவு செய்ய வேண்டாம் எனவும் தடுத்தனர்.இதனையடுத்து வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு வந்ததையடுத்து வனஇலாகாவுடன் பேசிய அவர்  காணி விடுவிக்கப்பட்ட காணி எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் காணி துப்பரவு பணி முடிந்து எமது வீட்டில் நிற்கும் போது மாலை வேளை மதுபோதையில் சிவில் உடையில் வந்த நான்கு விசேட அதிரடிப்படையினர் எமது வீட்டு வளவில் வைத்து எம்மை தாக்கினர். ஊர் மக்கள் திரண்டதையடுத்து அங்கிருந்து சென்று விட்டனர்.

நாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் இது குறித்து வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தோம் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் கருத்து தெரிவிக்கையில்,

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய மக்கள் தமது காணிகளை சுத்தமாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் விசேட அதிரடிப்படையினர் நேற்று (25.03.2023) காணி துப்பரவு பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நாம் வனஇலாகாவுடன் பேசி மக்களது காணி என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

மாலை மது போதையில் சென்ற அதிரடிப்படையினர் தாக்கியதாக எனக்கு பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்ததையடுத்து நான் அங்கு சென்றேன்.

இதன்போது விசேட அதிடிப்படையினர் சென்று விட்டனர். நான் எனது வாகனத்தில் காயமடைந்த இருவரையும் அழைத்து வந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தேன்.

இது தொடர்பகில் விசேட அதிரடிப்படையின் பிரதிபொலிஸ் மா அதிபர் ஜெயசுந்தரவிடம் முறைப்பாடு செய்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.