ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சிறப்புரிமை மீறல் விவகாரமும் விவாதிக்கப்படவுள்ளது

91 0

ன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தமது சிறப்புரிமை மீறப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடத்தில் எழுத்துமூலம் தெரிவித்ததை அடுத்து, குறித்த விவகாரம் தொடர்பில் ஒழுக்கம் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மேற்பார்வைக்குழு விவாதிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு பாராளுமன்ற வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை நிதி அமைச்சின் செயலாளர் விடுவிக்காத செயற்பாடானது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் செயலாகும்.

ஆகவே, பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை நிதியமைச்சின் செயலாளரால் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார எழுத்துமூலமான ஆவணத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடத்தில் கையளித்திருந்தார்.

அதனையடுத்து, இந்த ஆவணத்தினை ஒழுக்கம் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மேற்பார்வைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒழுக்கம் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மேற்பார்வைக்குழுவின் அடுத்த அமர்வில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் சிறப்புரிமை விவகாரமும் விவாதிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.