இலங்கையர் என்ற வகையில் ஜனாதிபதியை பாராட்டுகிறேன்

206 0

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்கப் பெற்றுள்ளதையிட்டு இலங்கையர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராட்டுகின்றேன் அவரின் கடின முயற்சியை வரவேற்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (22) புதன்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. ஆகவே  பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி எடுத்த முயற்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு இக்கட்டான நிலையிலே இவ்வாறான சூழ்நிலையிலே அவர் இந்த நாணய நிதியத்தோடு பேசி  இந்த நிதியை இலங்கைக்கு பெற்றுத் தருவதற்கு எடுத்த முயற்சிகளை நாங்கள் வரவேற்கின்றோம்.

நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தை நாடுங்கள் என 2020 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்திடம் பலமுறை எடுத்துரைத்தோம். எமது கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

இறுதியில் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது, பாரிய விளைவுகளுக்கு பின்னர் காலம் கடந்தாவது இந்த வேலைத்திட்டத்தை செய்தமைக்கு  இலங்கை பிரஜை என்ற ரீதியில் சந்தோசப்படுகின்றோம்.

இலங்கை 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளது. இருப்பினும்  இந்த தடவை மிக மோசமான சூழ்நிலையிலே இலங்கை நாணய நிதியத்தை நாடியது.

இந்த நாடு வங்குரோத்து அடையாத நாடு என்ற ரீதியில் சர்வதேச அழுத்தங்கள் குறைந்திருக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்களும் குறைந்திருக்கலாம். ஆனால் இன்று அழுத்தங்கள் கூடியுள்ளது .

நாட்டிலே ஊழல் மலிந்ததன் காரணத்தினாலேயே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. கடந்த காலத்தில் சீனி ஊழல் இடம்பெற்றுள்ளது. வௌ்ளை பூண்டில் ஊழல் இடம்பெற்றுள்ளது. தேங்காய் எண்ணெயில் ஊழல் இடம்பெற்றுள்ளது.

ஆனால் இவை அனைத்தையும் யார் செய்தது என இந்த அரசாங்கத்திற்கு தெரியும். ஜனாதிபதிக்கும் தெரியும் அரசாங்கத்திற்கும் தெரியும்.

ஏன் அது தொடர்பில்  நடவடிக்கை எடுக்கவில்லை?ஆகவே ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை முதலில் எடுக்க வேண்டும். நாட்டை கட்டியெழுப்புவதற்கு அதுதான் சிறந்தது என்றார்.