விக்னேஸ்வரன் இனவாதி – மீண்டும் கடுமையாக விமர்சிக்கும் சுதந்திரக் கட்சி

260 0

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியைப் போன்றுதான் எப்போதும் செயற்பட்டு வருவதாக நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினைகளைத் தோற்றுவித்து குழப்பத்தை ஏற்படுத்தவே இவ்வாறானவர்கள் செயற்பட்டு வருவதாகவும் அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரும், மேல் மாகாண முதலமைச்சருமான இசுறு தேவப்பிரிய பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய “தேசிய பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் சில குழுக்கள் உள்ளன.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முழுமையாக ஓர் இனவாதியைப் போன்றுதான் செயற்படுகின்றார்.

மேல்மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களே அதிகமாக உள்ளனர்.

இரண்டாவதாக தமிழ் மக்களும், மூன்றாவதாக சிங்கள மக்களும் உள்ளனர்.

எனினும் இந்த மக்களின் நம்பிக்கையை வென்றிருக்கின்றோம்.

இனவாதத்தைப் பிடித்துக்கொண்டு ஒருநாளும் முன்னோக்கி நகர முடியாது.

அனைத்து இனங்களிடையேயும் ஐக்கியத்தை ஏற்படுத்தியே பயணத்தை மேற்கொள்ள முடியும்.

அதேபோல அரசியலமைப்பு திருத்தம் வரும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது ஆளுகைக்குக் கீழ்ப்பட்டது என்று நினைத்துக் கொண்டுதான் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சிலர் கருத்துக்களைக் கூறிவருகின்றனர்எனவும் இசுறு தேவப்பிரிய குறிப்பிட்டார்.