யுத்தக்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்டனை நிச்சயம் – மஹிந்த

335 0

யுத்தக்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படுமென மீன்பிடித்துறை மற்றும் கடற்றொழில்துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இராாணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகளில் பொதுமக்களை குடியேற்றுவதாக பொய்யான தகவல்கள் பரப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர “தாய் நாட்டிற்காக தனது அவையவங்களை இழந்த இராணுவத்தினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும்.

அதற்கு ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் உடன்பட்டுள்ளது.

மின்சார கதிரை, சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம்? சர்வதேச விசாரணை, சர்வதேச நீதிபதி உள்ளிட்ட அபாயங்களில் இருந்து அவர்களை காப்பாற்றியுள்ளோம்.

ஆகவே நாட்டிற்குள்ளும் அவர்களை சிறையில் அடைக்க நாம் தயாரில்லை.

இதன்மூலம் தவறிழைத்தவர்களை காப்பாற்றுகிறோம் என அர்த்தப்படுத்தக்கூடாது.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்போது இராணுவ அதிகாரிகள் தவறிழைத்திருந்தால் அவர் நிச்சியம் தண்டிக்கப்படுவார்.

அதில் நாம் பின்வாங்கப்போவது இல்லை. இதற்கு முன்னர் இவ்வாறான சம்பவங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் நோக்கத்திலோ அல்லது வேறு காரணங்களுக்காகவே யாராவது தவறிழைத்திருந்தால தண்டனை நிச்சயம்.

ஊடகவியலாளர்களுக்கு சாதாரண பிரஜைகளுக்கு தாக்குதல் நடத்தியிருந்தால், கொலை சம்பவங்களுடன் இராணுவத்தினர் தொடர்புபட்டிருந்தால் அதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது இந்த நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பு மாத்திரமல்ல சர்வதேசமும் அதனையே எதிர்பார்க்கின்றது.

இதற்காகவே இந்த நாட்டிற்குள் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு எமக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே சர்வதேசத்தால் எமக்கிருந்த அபாயம் நீங்கியது.

ஆகவே சிலர் நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படப்போவதாகவும், ஆபத்தில் இருப்பதாகவும் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர்.

மைத்திரிபால சிறிசேன தலைமையில் இயங்கும் இந்த அரசாங்கத்தின் கீழ் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்பட வாய்ப்பில்லை.

தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

இராணுவ முகாம்கள் அமைந்துள்ள இடங்களில் மக்களை மீளக்குடியமர்த்துர்வதாக குற்றம்சாட்டுகின்றனர்.

அவை அனைத்தும் மக்களை ஏமாற்றுவதற்கான கதைகளே.“ எனக் குறிப்பிட்டார்.