துமிந்தவிற்கு வழங்கப்பட்ட மன்னிப்பை எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் மனு! விசாரணை ஒத்திவைப்பு

65 0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணை நேற்றைய தினம் (20.03.2023) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது.

சுமனா பிரேமச்சந்திர, ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கசாலி ஹூசைன் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி மரண தண்டனை விதித்தது.

எவ்வாறாயினும், 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச – மகிந்த ராஜபக்ச ஆட்சி பொறுப்பேற்ற போது துமிந்த சில்வா விடுவிக்கப்படுவார் என பலமான யூகங்கள் நிலவின.

இதன்படி, துமிந்த சில்வாவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பின்னர் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்.

இந்நிலையில், நேற்றைய தினம் அழைக்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்புக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மார்ச் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.