நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் முதற் கட்டமாக 330 மில்லியன் கிடைக்கும்

62 0

இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதி குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் மட்ட கலந்துரையாடல் திங்கட்கிழமை (20) இடம்பெறவுள்ளது.

இதன் போது எடுக்கப்படும் தீர்மானம் தொடர்பில் செவ்வாய்கிழமை (21)உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இந்த நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிப்பாளர் சபை அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் , இம்மாதத்திற்குள் 330 மில்லியன் டொலர் கிடைக்கப்பெறவுள்ளது.

அத்தோடு இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் நீடிக்கப்பட்ட கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பரில் எட்டப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இதற்கான முன்மொழிவினை நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையில் சமர்ப்பிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் இழுபறி நிலைமையிலேயே காணப்பட்டது.

கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் இருதரப்பு கடன் வழங்குனர்களிடமிருந்து நிதி உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்ளல் என்பவற்றின் காரணமாகவே இழுபறி நிலை தொடர்ந்தது.

எவ்வாறிருப்பினும் கடந்த வாரம் சீனாவும் கடன் மறுசீரமைப்பிற்கான நிதி உத்தரவாதத்தை வழங்கியதையடுத்து , நாணய நிதியத்திடமிருந்து கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் இல்லை என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதியை வழங்குவது குறித்த பணிப்பாளர் மட்ட கலந்துரையாடல் நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. இதன் போது எடுக்கப்படவுள்ள தீர்மானம் குறித்து இலங்கை நேரப்படி செவ்வாய்கிழமை காலை விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் ஊடாக அறிவிக்கப்படவுள்ளது.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழு பிரதானி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் நாணய நிதியத்தின் கடன் உதவி பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார ஏற்பாடுகள் என்ன என்பது  தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேற்குறிப்பிட்ட விடயங்களை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

திங்கட்கிழமை (20) பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைக்கும் என்று நம்புகின்றோம். இதற்காக நாம் பாரிய அர்ப்பணிப்புக்களை செய்திருக்கின்றோம்.

நாட்டு மக்களுக்கு இதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இக்கடன் திட்டத்தில் முதற்கட்டமாக இம்மாதத்திற்குள் 330 மில்லியன் டொலர் கிடைக்கப் பெறவுள்ளது. அத்தோடு நாணய நிதியத்தின் ஒத்துழைப்பானது 2.9 பில்லியன் டொலருடன் நின்று விடப் போவதில்லை.

அனுமதி கிடைக்கப் பெற்றதன் அடுத்த கட்டமாக முதலில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை கடன் வழங்குனர்களுடனான கடன் மறுசீரமைப்புக்களை ஆரம்பிப்பதாகும்.

தற்போது சுமார் 40 அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை இடை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இவ்வாறான மறுசீரமைப்புக்களின் போது எந்தவொரு அரச ஊழியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்கின்றோம்.

நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுடன் எமது நாட்டுக்கு குறுகிய காலத்திற்குள் சுமார் 7 பில்லியன் டொலர் கிடைக்கப்பெறவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி , உலக வங்கி , ஜைக்கா உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீடுகள் உள்ளிட்டவற்றின் ஊடாக இந்த 7 பில்லியன் டொலர் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் எமது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றார்.