கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை

92 0

வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தை அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் ஆறு திருமுருகன், உமாச்சந்திர பிரகாஷ் உள்ளிட்டோர் நேற்று (17.03.2023) சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த ஆலயம் அமைந்திருந்த இடத்தில் எதிர்வரும் பங்குனி உத்தர தினத்தன்று ஏப்ரல் 6 ம் திகதி வியாழக்கிழமை சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலாநிதி ஆறு திருமுருகன் கருத்துத் தெரிவிக்கையில்,

ஆதி சிவன் ஆலயம் இருந்த இடம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

சடையம்மா மடம் இருந்த பகுதி அடையாளம் காண முடிகிறது, ஆனால் சடையம்மா மடம் இருந்ததற்கான அடையாளங்கள் எவையும் இல்லாமல் காணப்படுகிறது.

கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை: ஆறு திருமுருகன் | Aru Thirumurugan About Sivan Temple In Kerimalaiஅங்கிருந்த சிவலிங்கம் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணன் ஆலயம் இருந்த பகுதி இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

சடையம்மா மடம் இருந்த இடத்திற்கு அருகே நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றை எல்லாம் பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. இதை யாருக்கு எடுத்து கூறுவது என்று தெரியாமல் உள்ளது.

இன்றையதினம் பார்வையிட வந்த யூடி உத்தியோகத்தர்களிடம், எதிர்வரும் பங்குனி உத்தரத்தன்று ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதி கோரியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை ஆதிசிவன் ஆலயம் அமைந்திருந்த இடத்தை மூடி ஜனாதிபதி மாளிகை அமைக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளரும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரத்தியோகச் செயலாளருமான உமாச்சந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஊடகங்களில் பேசு பொருளான கீரிமலை ஆதி சிவன் ஆலயத்தை பார்வையிடுவதற்காக நானும் கலாநிதி ஆறு திருமுருகனும் கடற்படை அதிகாரிகளுடன் சென்றிருந்தோம்.

சுமார் 32 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டிருந்த குறித்த ஆலயம் இடிபாடுகளுடன் காணப்பட்டமையை நாங்கள் அவதானித்தோம். ஆதிசிவன் ஆலயத்தின் அத்திவாரங்கள் மிகவும் தெளிவாகத் தெரியும் நிலையில் அதனை மூடி ஜனாதிபதி மாளிகை அமைக்கப்படவில்லை என்பதை நேரில் சென்று பார்த்த போது தெரிய வந்தது.

அதேபோல் சடையம்மா மடம் பாதுகாப்பாக உள்ள நிலையில் அங்கு உள்ள கிருஷ்ணர் ஆலயத்தில் சிவலிங்கம் ஒன்று கொடிமரம் வைக்கப்படும் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது இந்த சிவலிங்கம் ஆதி சிவன், சிவலிங்கமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஏனெனில் கிருஷ்ணர் ஆலயத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் நிரந்தரமாக அமைக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏப்ரல் ஆறாம் திகதி பங்குனி உத்திர தினத்தில் புதிய சிவலிங்கம் ஒன்றை ஆதி சிவன் ஆலயத்தில் அமைக்கப்பட்ட இடத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.