வவுனியாவில் ஒரே நாளில் மூவர் பலி

87 0

வவுனியா – பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாரிக்குட்டியூர் பகுதியில் ஒரே நாளில் மூவர் மரணமடைந்துள்ளதுடன் நஞ்சு அருந்திய இளம் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாரிக்குட்டியூர், படிவம் 4 பகுதியில் தவறான முடிவெடுத்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (17.03.2023) மதியம் பூவரசன்குளம் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த வாரிக்குட்டியூர் படிவம் 5 இல் வசிக்கும் 41 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மேலும், வாரிக்குட்டியூரின் அயல் கிராமமான கங்கன்குளம் பகுதியில் வசிக்கும் 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் சிறுநீரக நோயினால் மரணமடைந்துள்ளார்.

இது தவிர, ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் வாரிக்குட்டியூர் படிவம் 5 இல் வசிக்கும் 20 வயதுடைய பெண் ஒருவர் நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய போது நஞ்சு அருந்திய நிலையில் அப்பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றில் மயங்கிய நிலையில் ஊர் மக்களால் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல் நிலை பாதிப்படைந்துள்ளதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு பூவரசன்குளத்தின் வாரிக்குட்டியூர் பகுதியில் ஒரே நாளில் இடம்பெற்ற 3 மரணங்கள் தொடர்பிலும், இளம் பெண் பெண் ஒருவர் நஞ்சருந்தி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பிலும் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.