அண்ணாமலை தீவிர ஆலோசனை: நாடாளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணி அமைக்க பாஜக திட்டம்?

72 0

சென்னையில் பாஜக மாநில நிர்வாகிகளுடன் மாநில தலைவர்அண்ணாமலை நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி நிலைபாடு குறித்து விரைவில் அறிவிக்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. சட்டமன்ற தேர்தலை போலவே, நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமைத்துள்ளது.

ஆனால், பாஜக-அதிமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடருமா? என்பது பல்வேறு வாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. பாஜக-அதிமுகவினரின் மோதல் போக்குதான் இந்த வாதங்களுக் கெல்லாம் தீனி போட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

அதிமுகவினர் அண்ணாமலையை விமர்சிப்பதும், பாஜகவினர் பழனிசாமியை விமர்சிப்பதும் என கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் அவ்வப்போது இருதரப்பினரும் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றனர். இந்த மோதல் விவகாரம் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தாது என்று இரு தரப்பினரும் கூறிவந்தாலும் கூட, ஈரோடுகிழக்குத்தொகுதி இடைத்தேர்தலின் போது மறைமுகமாக இருந்த மோதல் போக்கு, தற்போது வெளிப்படையாகவே நடந்து வருவது கூட்டணியில் பிளவு ஏற்பட தொடங்குவதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைகிறது.

பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துவிட்டு, அதிமுகவில் இணைந்ததில் இருந்து பாஜக-அதிமுக மோதல் விவகாரம்பூதாகரமாக வெடித்து சிதறுகிறது.பழனிசாமியின் உருவப்படத்தை பாஜகவினரும், அண்ணாமலையின் உருவப்படத்தை அதிமுகவினரும் என மாறிமாறி எரித்து எதிர்ப்பைதெரிவித்து வருகின்றனர்.

திமுகவைக் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்திலும் கூட கூட்டணி கட்சியினர் என மறந்து, எதிர்கட்சிகளை விமர்சிப்பதை போல பாஜக-அதிமுகவினர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னைஅமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் அண்ணாமலை தலைமையில் திடீரென பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்றுநடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து நிர்வாகிகளுக்கு அண்ணாமலை ஆலோசனை வழங்கினார்.

தற்போது, கர்நாடகா மாநில தேர்தல் பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, அங்கேயே முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டிய சூழல் இருப்பதால், தமிழகத்துக்கு அவ்வப்போது வர முடியாது என்றும், முக்கியமான கட்சி கூட்டமாக இருந்தால் மட்டுமே இங்கு வந்து பங்கேற்க முடிவு செய்துள்ளதாகவும் அண்ணாமலை கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், பாஜக நிர்வாகிகள் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது தொடர்பாககூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். அப்போது, கர்நாடகா மாநில தேர்தல் பணிகளை முடித்துவிட்டு, மே மாதம் 10-ம் தேதி ஒரு முக்கிய முடிவை அறிவிக்க இருப்பதாக அண்ணாமலை கூட்டத்தில் தெரிவித்தாக பாஜக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக அவரது முடிவு இருக்க கூடும் எனவும், பெரும்பாலும், பழனிசாமி அல்லாத புதிய கூட்டணியை அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் என்ற அறிவிப்பை அண்ணாமலை அறிவிக்கலாம் எனவும் பாஜகவினர் தெரிவித்தனர்.

ஒருவேளை பழனிசாமி அல்லாதகூட்டணியை அமைத்தால், பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா வை ஒருங்கிணைத்து புதிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு நேரிடும் என பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.