அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

14 0

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

பழனிசாமி தரப்பினர் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடத்திய பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பொதுச்செயலாளர் தேர்தலுக்கான பணிகளை கட்சி தலைமை தொடங்கியது. முதல்கட்டமாக, ஓபிஎஸ் படத்தை நீக்கி, பழனிசாமி கையெழுத்திட்ட அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நேற்று அறிவித்தனர்.

அதிமுக சட்ட விதி 20 (அ), பிரிவு 2-ல் கூறியபடி,‘கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்’ என்ற விதிக்கு ஏற்ப, பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல்18-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 27-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். போட்டியிட விரும்பும் தொண்டர்கள் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.