நீதித்துறை மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கான முயற்சிகளை முறியடிப்போம்

151 0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரை தேர்தல் ஆணைக்குழுவை கலைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

நிறைவேற்றதிகாரத்தைக் கொண்டு நீதித்துறை மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கான முயற்சிகள் முறியடிக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேர்தலுக்கு தினத்தைக் குறிக்கின்றனர். பின்னர் அதனை மாற்றுகின்றனர். தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஏன் இவ்வாறு அஞ்சுகின்றது? தேர்தல் நடத்தப்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தி பாரிய வெற்றியைப் பெற்றுக் கொள்ளும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

தேர்தலுக்கே இவ்வாறு அஞ்சினால் , தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும் போது எந்தளவிற்கு எமது நாட்டை பலவீனமான நிலைமைக்கு இட்டுச்செல்வார்கள்? அது மாத்திரமல்ல. தேர்தலுக்காக பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை அவ்வாறே வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும் , அதற்கு இந்த அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை.

மாறாக இந்த உத்தரவை வழங்கிய நீதியரசர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கவே அரசாங்கம் முற்படுகின்றது. நீதிமன்றத்திற்கும் , தேர்தல் ஆணைக்குழுவிற்கும் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக தமது சிறப்புரிமைகள் மீறப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமக்கு தேவை என்றும் , எனவே அதனை வழங்குமாறும் சிறப்புரிமை குழு நீதிமன்றத்திடம் கோரவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு நீதித்துறைக்கு நேரடியாக அழுத்தம் பிரயோகிக்கின்றனர். நீதியரசர்களுக்கு இவ்வாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு நாட்டு மக்களும் வீதிக்கிறங்கி அமைதியான முறையிலும் , ஜனநாயக ரீதியிலும் போராட வேண்டும்.

நிறைவேற்றத்திகாரத்தினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் நேரடியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரை தேர்தல் ஆணைக்குழுவை கலைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இந்த நிறைவேற்றதிகாரியின் ஊடாக நாட்டை சீரழித்த மொட்டு பெரும்பான்மை , நாட்டையும் வங்குரோத்தடையச் செய்து , ஜனநாயகத்தையும் ஒழிப்பதற்கு முயற்சிக்கிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் 220 இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமைக்காக வீதிக்கிறங்கி போராடுவோம் என்றார்.