ஆசிய குத்துச்சண்டை கூட்டுச் சம்மேளன ஆணைக்குழுக்களில் முதல் தடவையாக 3 இலங்கையர்கள்

159 0

ஆசிய குத்துக்சண்டை கூட்டுசம்மேளனத்தின் கீழ் இயங்கும் பல்வேறு ஆணைக்குழுக்களில் இலங்கை குத்துச்சண்டை அதிகாரிகள் மூவர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை குத்துச்சண்டை வரலாற்றில் ஆசிய குத்துச்சண்டை கூட்டுசம்மேளனத்தில் 3 இலங்கையர்கள் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.

ஹேமன்த வீரசிங்க (மத்தியஸ்தர் மற்றும் நடுவர்), சியாமலி ப்ரபுத்திகா லொக்குயத்தஹிகே (பெண்கள்), டொக்டர் தரங்க அருக்கொட (வைத்தியம்) ஆகியோர் 2023 முதல் 2027 வரை ஆசிய குத்துச்சண்டை கூட்டுசம்மேளனத்தின் ஆணைக்குழுக்களில் பதவி வகிக்கவுள்ளனர்.

தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை கூட்டுசம்மேளனத்தின் பொதுச்சபை அமர்வின்போது இந்த மூவரும் நியமிக்கப்பட்டனர்.

 

ஹேமன்த வீரசிங்க  

இலங்கை குத்துச்சண்டை சங்கத்தின் உதவி தலைவராக பதவி வகிக்கும்  ஹேமன்த வீரசிங்க, 2015இலிருந்து ஆசிய குத்துச்சண்டை கூட்டுசம்மேளனத்தில் மத்தியஸ்தர் மற்றும் நடுவர் ஆணைக்குழுவில் உறுப்பினராக இருந்துவருகிறார். இரண்டு தடவைகள் (2015-2018, 2020-2023) இந்த ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டார். கண்டி, புனித சில்வெஸ்டர் கல்லூரியினால் குத்துச்சண்டை வீரராக உருவாக்கப்பட்ட ஹேமன்த வீரசிங்க, 1986இல் பாடசாலை வீரராக தேசிய அணியில் இடம்பெற்றார். இதனை அடுத்து அக் கல்லூரியின் லயன் விருது அவருக்கு வழங்கப்பட்டது உள்ளூரிலும் சர்வதேசத்திலும் குத்துச்சண்டை வீரராக பிரகாசித்ததுடன் மத்தியஸ்தராக, நிருவாகியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.

 

 

 

 

 

சியாமலீ ப்ரபுத்திகா

இலங்கை குத்துச்சண்டை சங்கத்தின் பெண்களுக்கான ஆணைக்குழுவில் 2021ஆம் ஆண்டிலிருந்து உறுப்பினராக இருக்கும் சியாமலீ ப்ரபுத்திகா 2 நட்சத்திர சர்வதேச குத்துச்சண்டை மத்தியஸ்தர் ஆவார். லேட்டன் கிண்ண குத்துச்சண்டை சம்பியனும் தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான சியாமலீ, கராத்தே போட்டியில் கறுப்பு பட்டி மற்றும் முதலாம் டான் ஆகிய பட்டங்களையும் கொண்டுள்ளார். 2014இலிலிருந்து தேசிய மத்தியஸ்தராகவும் நடுவராகவும் கடமையாற்றிவரும் அவர், பிரான்ஸ், இந்தோனேசியா, எய்ந்தோவன், ஹங்கேரி, சீனா ஆகிய நாடுகளில் குத்துச்சண்டை போட்டிகளில் மத்தியஸ்தம் வகித்துள்ளார்.

தேசிய ஒலிம்பிக் குழுவினால் 2019இல் நடத்தப்பட்ட விளையாட்டுத்துறை நிருவாக பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த முன்னாள் சமுத்தரி பல்கலைக்கழக விரிவுரையாளரான சியாமலீ, பிரபல தனியார் நிறுவனமான மாஸ் ஹோல்டிங்ஸில் மனித வள நிறைவேற்று அதிகாரியாக பதவி வகிக்கிறார்.

 

 

 

 

 

 

டொக்டர் அருக்கொட

 

இலங்கை குத்துச்சண்டை சங்கத்தின் வைத்திய ஆணைக்குழுவில் 2018இலிருந்து கடமையாற்றிவரும் டொக்டர் தரங்க அருக்கொட, கடற்படை குத்துச்சண்டை சங்கத்தின் ஓழுக்காற்றுக் குழு செயலாளராக கடமையாற்றுகிறார். வைத்திய கலாநிதியான டொக்டர் அருக்கொட, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் 2013இல்  எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து பட்டப் பின் கல்விக்கான களனி பல்கலைக்கழகத்தில் ஆலோசனைத்துறையில் எம்ஏ பட்டம் பெற்றார். ஹங்கேரியில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் மத்தியஸ்தராக கடமையாற்றி இலங்கைக்கு பெருமைசேர்த்த டொக்டர் தரங்க அருக்கொட, இராகமையிலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாக பணிபுரிகிறார்.