முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தொடர்ந்தும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த காணிகள் இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டுள்ளது.
எனினும் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரையில் தங்களின் போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை கேப்பாபுலவில் தங்களின் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளனர்.
கேப்பாபுலவு பிரதேசத்தில் உள்ள சீனியாமோட்டை, சூரியபுரம் ஆகிய பகுதிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், புலக்குடியிருப்பு பகுதி நேற்று விடுவிக்கப்பட்டது.
ஆயினும் கேப்பாபுலவு பிரதேசத்தில் 128 குடும்பங்களுக்கு சொந்தமான 242 ஏக்கர் காணிப் பரப்பு இன்னும் விடுவிக்கப்படாதுள்ளதாகவும், அதனை விடுவிக்க கோரியும் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படும் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தால் இந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும்,
அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் குறித்து ஜனாதிபதின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று முதல் தபால் அனுப்பும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
அதேநேரம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 11 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

