ராஜபக்ஷ குடும்பத்தால் நாடு வங்குரோத்தடைந்துள்ளது – விமல் கடும் சாடல்

83 0

ராஜபக்ஷ குடும்பத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே 134 உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள்.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி மக்களின் வாக்குரிமைக்கு தடையாக உள்ளார்.போராடியேனும் வாக்குரிமையை வெல்வோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மொனராகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2019 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் சிறந்த மாற்றத்திற்காக கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

ஆட்சிமாற்றத்திற்கு முன்னின்று செயற்பட்டோம்.நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை,மாறாக ராஜபக்ஷர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது.

குடும்ப ஆட்சி காரணமாக நாட்டு மக்கள் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் ராஜபக்ஷர்களை புறக்கணித்தார்கள். இந்த நிலை மீண்டும் தோற்றம் பெறாது, வரலாற்று பாடத்தை ராஜபக்ஷர்கள் கற்றுக்கொண்டுள்ளார்கள் என எதிர்பார்த்தோம் ஆனால் எமது எதிர்பார்ப்பு இறுதியில் பொய்யானது.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் அமைச்சரவையை பகுதியளவில் ஆக்கிரமித்த ராஜபக்ஷர்கள் 2020 ஆம் ஆண்டு அமைச்சரவையை முழுமையாக ஆக்கிரமித்தார்கள்.

போதாதற்கு ரோஹித ராஜபக்ஷவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எமது கடும் எதிர்ப்பால் அந்த முயற்சியை ராஜபக்ஷர்கள் கைவிட்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொருளாதாரம் தொடர்பில் அடிப்படை தகைமை இல்லாத பஷில் ராஜபக்ஷவை நிதியமைச்சராக நியமித்து அரசியல் ரீதியில் பாரிய தவறு செய்து இறுதியில் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு ராஜபக்ஷ குடும்பம் பொறுப்புக் கூற வேண்டும்.

ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்கள் ரணில் விக்கிரசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள்.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் வாக்குரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். போராடியேனும் நாட்டு மக்களின் வாக்குரிமையை வெல்வோம் என்றார்.