வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பில் அதிகாரியொருவரை பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளிநாட்டு பயணமொன்றுக்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு , வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அவர் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் தெளிவுபடுத்தி குடிவரவு – குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எஃப்.ஜே.இழுக்பிட்டிய வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குடிவரவு – குடியகழ்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டு தகவல்களுக்கு பதிலாக அவரது தகவல்கள் அன்றி, பிரிதொருவரின் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே அவருக்கு வெளிநாடு செல்வதில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாகத் தெரியவந்துள்ளது.
அதற்கமைய குறித்த தரவு கட்டமைப்பில் தகவல்களை உள்ளடக்கிய அதிகாரி பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எதிர்கொள்ள நேரிட்ட அசௌகரியம் தொடர்பில் குடிவரவு – குடியகழ்வு திணைக்களம் கவலை தெரிவித்துக் கொள்கின்றது.

