மக்கள் அவதானத்துடன் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்

115 0

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பின்பற்றுகின்றார். ஆகவே, ஜனநாயகத்துக்காக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நாவல பகுதியில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியலமைப்புக்கு அமைய தீர்மானங்களை முன்னெடுத்தாலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தலுக்கு இணக்கம் தெரிவித்தால் மாத்திரம்தான் தேர்தல் இடம்பெறும் என பொதுஜன பெரமுனவின் உள்ளக பேச்சுவார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்த இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவுக்கு வாக்குறுதி வழங்கிய காரணத்தினால் தான் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஜனநாயகம் பற்றி முழு உலகத்துக்கும் பாடம் கற்பிப்பார்கள். ஆனால், அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் சர்வாதிகாரம் குறித்து உலகுக்கு பாடம் கற்பிப்பார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜே.ஆர். ஜெயவர்தனவின் கொள்கையை பின்பற்றுகிறார். ஆகவே, ஜனநாயக உரிமைக்காக போராடும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படும்போது போர்க்கொடி தூக்கிய கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை கண்டும் காணாதது போல் இருப்பது கவலைக்குரியது என்றார்.