4 மாகாணங்களில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை ; தீர்வு இல்லையேல் போராட்டங்கள் தீவிரமடையும்

129 0

அரசாங்கத்தின் நியாமற்ற வரிக் கொள்கைகள் எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மீள பெறுமாறு வலியுறுத்தியும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  இன்று திங்கட்கிழமை நான்கு மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை தமக்கான தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை என்றால் இதர அனைத்து மாகாணங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகப்  பேச்சாளருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த வாரங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு இதுவரையிலும் அரசாங்கத்தினால் எந்தவொரு தீர்வுகளும் வழங்கப்படவில்லை.

அதற்கமைவாக இன்று முதல் நான்கு மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படவுள்ளோம். மேல், தென், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில்  சுகாதார நிலையங்கள் வைத்தியசாலைகள் உட்பட சகல மருத்துவ  சேவை நிலையங்களில் உள்ள வைத்தியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும்  தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படவுள்ளனர்.

அதன்படி, இன்று திங்கட்கிழமை காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பமாகும். இருப்பினும் குறித்த சில வைத்தியசாலைகளில் மாத்திரம்  வைத்திய சேவைகள் முன்னெடுக்கப்படும். குறிப்பாக புற்றுநோய் வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகள், இராணுவ வைத்தியசாலைகள் என்பன தொடர்ச்சியாக இயங்கும். மேலும் நாடாளாவிய ரீதியிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்கை பிரிவுகள் மாத்திரமே இயங்கும். வேறெந்த பிரிவுகளிலும் சேவைகள் வழங்கப்படாது.

மேலும் எம்மால் தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்படுமாயின் 4 மாகாணங்கள் தவிர்ந்த இதர ஏனைய மாகாணங்களான வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.இதற்கும் அரசாங்கத்திடமிருந்து  உரிய பதில் கிடைக்கவில்லை என்றால் நாளை மறுதினம் புதன்கிழமை அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து பாரியதொரு தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதன் காரணமாக முழு நாடும்  முடங்கும் அபாயம் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே எதிர்வரும் புதன்கிழமை 15 ஆம் திகதி பெட்ரோலியம், துறைமுகம், மின்சக்தி, நீர் வழங்கல், கல்வி, உயர்கல்வி, வங்கி, தபால் உட்பட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் 40 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.