கடந்த 13 வருடங்களுக்கு மேலாக இயங்காத நிலையிலிருந்த முழங்காவில் 19ஆம் கட்டை பொதுச்சந்தை மீள இயக்கப்பட்டுள்ளது.
மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள 19ஆம் கட்டை பொதுச்சந்தை யுத்த காலங்களின் பின்னராக முடங்கிப்போயிருந்தது.
அதேவேளை சந்தைப் பகுதியிலிருந்த பூநகரி பிரதேச சபைக்கு சொந்தமான கடைகளும் முற்றாக மூடப்பட்டேயிருந்தது.
அதன் பின்னரான காலப்பகுதியில் அந்த சந்தைப் பகுதி காடு பற்றிப்போயிருந்த நிலையில், பிறகு அச்சந்தைப் பகுதி மதுபோதையர்களால் இரவு நேர வதிவிடமாக மாறியிருந்தது.
இந்நிலையில் அப்பகுதி பொது அமைப்புக்களது கோரிக்கையினையடுத்து, பூநகரி பிரதேச சபையினால் 13 வருடங்களின் பின்னராக மீள புனரமைக்கப்பட்ட பொதுச்சந்தை அண்மையில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
அங்கு பெருமளவிலான வியாபாரிகள் வருகை தரத் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களும் இலகுவில் தமது சேவைகளை பெறத் தொடங்கியுள்ளனர்.
முடங்கியிருந்த சந்தைகளை மீள இயக்கி வழங்கிய பூநகரி பிரதேச சபைக்கு அப்பகுதி பொது அமைப்புக்கள் தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றன.

