உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிமைக்காக மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்

87 0

தேர்தலை பிற்போடுவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரம்பரை வழி வழக்கம்.

தேர்தலை காலவரையறையின்றி பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிமையை பெற்றுக்கொள்ள வெகுவிரைவில் நாட்டு மக்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மஹரகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (4)  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிறைவேற்றுத்துறை ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படும்போது அதன் விளைவு பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தும். சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாட்டில் தோற்றம் பெற்ற தமிழருக்கு எதிராக இனக் கலவரம், வன்முறை மற்றும் 30 வருடகால ஆயுத போராட்டம் ஆகியவற்றை ஐக்கிய தேசிய கட்சியே ஆரம்பித்து வைத்தது.

தேர்தலை பிற்போடுவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரம்பரை வழி பழக்கமாகும். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன பொதுத்தேர்தலை பிற்போட்டு நாட்டில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரச தலைவர் அல்ல. அவருக்கு தேர்தல் தொடர்பில் அக்கறை கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியாக புறக்கணித்துவிட்டார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவினால் தான் அவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அல்ல, எந்தத் தேர்தல் இடம்பெற்றாலும், ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் படுதோல்வியடையும். இவ்விரு கட்சிகளின் அரசியல் தோல்விக்காக நாட்டு மக்களின் வாக்குரிமையை அடகு வைக்க முடியாது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கடுமையான தடை விதித்துள்ளது. தேர்தலை காலவரையறையின்றி பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிமையை பெற்றுக்கொள்ள வெகுவிரைவில் நாட்டு மக்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.