சிறிவர்தன, கங்கானி, ரத்நாயக்க ஆகியோருக்கு அழைப்பு

107 0

ள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கான நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கானி லியனகே மற்றும் பொலிஸ்மா அதிபர் சி.டி.ரத்நாயக்க ஆகியோருக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (7) இரு தரப்பினருக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

நிதி விடுவிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடையுத்தரவை அடிப்படையாக கொண்டு தீர்க்கமான ஒரு தீர்மானத்தை எடுத்து எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தினத்தை அறிவிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கான புதிய திகதியை தீர்மானிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை கூடியது. அதன்போது தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிதியை திறைசேரி விடுவிக்காமல் தடுத்து வைத்துள்ளதை தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடையுத்தரவை கருத்திற்கொண்டு தேர்தல் வாக்கெடுப்பு புதிய திகதியை அறிவிக்கும் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு பிற்போட்டது.

இதற்கமைய உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை முன்னிலைப்படுத்தி திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, அரச அச்சக திணைக்கள தலைவர் கங்கானி லியனகே, பொலிஸ்மா அதிபர் சி.டி ரத்நாயக்க ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இவர்களுடனான பேச்சுவார்த்தை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு இழுபறி நிலையில் உள்ள இச்சந்தர்ப்பத்தில் சர்வஜன வாக்குரிமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 9ஆம், 10ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி விடுவிப்பு பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்க்கட்சிகள் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.