இலங்கையில் 5 வருடங்களில் எச்.ஐ.வி அதிகரிப்பு

238 0

“இலங்கையில் கடந்த 5 வருடங்களில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருகிறது. முன்னர் இது 30 – 35 வயதினரிடையேதான் அதிகம் காணப்பட்டது.

ஆனால், இப்போது 20 – 25 வயதினரிடையே காணப்படுகின்றது. இலங்கையில் 2,557 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த வருடம் 239 பேர் புதிதாக இனங்காணப்பட்டனர்” என, ஐக்கிய நாடுகளின் கூட்டு எச்.ஐ.விஃஎயிட்ஸ் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட முகாமையாளர் டொக்டர் தயநாத் ரணதுங்க தெரிவித்தார்.

இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றி கல்வி மற்றும் அறிவு குறைவாக இருப்பதுவே, இதற்கான பிரதான காரணம் என, அவர் தெரிவித்தார். சுகாதார ஆர்வலர்களின் பல வருட கடும் உழைப்பின் பின்னரும் இலங்கை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இனப்பெருக்க சுகாதார அறிவூட்டும் முறைமை அமையவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் பதின்ம வயதுக் கர்ப்பத்தின் சதவீதம் 5க்கும் 7க்கும் இடையில் (15,000 பேர்) உள்ளதாகவும் இது மிகவும் அதிகமானது எனவும், இந்த நிலைமைக்கும் மேற்கூறிய காரணமே பொருந்தும் என்றார். இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பால் தொடர்பிலான ஆறிவு சகல பதின்ம வயதினருக்கும் வழங்கப்பட்ட வேண்டுமெனக் கூறிய அவர், இலங்கையில் 2016இல் மொத்த கருவள சதவீதம் 2.09ஆக இருந்தது. சிசு மரண சதவீதம் 1000க்கு 9 ஆக இருந்தது.

பிரசவத்தின் போது தாய் இறப்பு 100,000க்கு 33 ஆக 2015இல் காணப்பட்டது. ஆண் – ஆண் பாலுறவு எச்.ஐ.வி தொற்று விரைவில் அதிகரிப்பதற்குப் பிரதான காரணமென, ஐக்கிய நாடுகளின் கூட்டு எச்.ஐ.விஃஎயிட்ஸ் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஆலோசகர் கமனி ஜினதாஸ தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் அண்மைக்காலமாக கணினி வழியினூடாக மேற்கொள்ளப்பட்டு வரும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான குற்றச்செயல்களால், பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளமையினால், இக் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான புதிய சட்ட மூலம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கொண்டுவரப்படவுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்