உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதனூடாக நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடுமா என்று மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கையர்கள் என்ற முறையில் நாம் பாரியளவிலான சவால்களை எதிர்கொண்டோம்.
நாட்டின் அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் எதிர்கொள்ளாத கொரோனா பெருந்தொற்றின் பிரதிபலனாகவும் பொருளாதார நெருக்கடியின் பிரதிபலனாகவும் நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
அரசியல் நெருக்கடி காரணமாக இந்த நாட்டின் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழலில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நாட்டில் நீதி, அமைதியை பேண முடியாமல் போனது.
நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையானது தொடர்ந்து நீடிக்குமாயின் எதிர்வரும் வருடம் மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணத்தை வழங்கும் வருடமாக அமையும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நேற்றைய தினம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
தற்போதைய நிலைமையை அவதானித்து பொருளாதார ரீதியில் தீர்மானங்களை எடுக்கும்போது குறிப்பாக வரிக்கொள்கை, மின்கட்டண அதிகரிப்பு, பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு போன்றவற்றால் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிளை எதிர்கொண்டுள்ளனர் என்பதை நாம் யாவரும் அறிவோம்.
நாம் இந்த நெருக்கடியிலிருந்து எவ்வாறாயினும் மீண்டெழ வேண்டும். நாடு என்ற முறையில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்துள்ளோம்.
நாட்டின் நெருக்கடியிலிருந்து ஓரளவேனும் மீள்வதற்கு ஒரே ஒரு வழியாக இருப்பது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவதேயாகும்.
எமது நாட்டுக்கு மட்டும் இந்த நிலைமை ஏற்படவில்லை.
ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளிலும் இந்த பொருளாதார நெருக்கடி காணப்படுகின்றது. குறித்த நாடுகளின் பணவீக்கம் அதிகரித்து செல்கின்றது.
நாட்டின் ஜனநாயகத்துக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். மக்களின் ஜனநாயக உரிமையான தேர்தலை எதிர்கொள்வதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்.
எனினும் தற்போது நாடு இருக்கும் நெருக்கடிக்கு மத்தியில் உள்ள10ராட்சிமன்ற தேர்தலை நடத்துவதனூடாக நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைத்துவிடுமா என்பது தொடர்பில் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாட்டு மக்களுக்கு இன்று பொருளாதார பிரச்சினை காணப்படுகின்றது.

