நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஐக்கிய தேசிய கட்சி தோற்றுவிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி எடுத்த தவறான தீர்மானங்கள் காரணமாகவே நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய இளைஞர் படையணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி எடுத்த தவறான தீர்மானங்களும் அவருக்கு வழங்கப்பட்ட தவறான ஆலோசனைகளுமே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும்.
இன்று நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளது.
நாட்டு மக்களால் வாழ முடியாத சூழலே காணப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்கள் காரணமாகவே இந்த நிலைமை நாட்டுக்கு ஏற்பட்டது.
எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயுக்கான தட்டுப்பாடு, மின்வெட்டு போன்ற நிலைமைகள் நாட்டில் தீவிரமடைந்ததால் இளைஞர்,யுவதிகள் வீதிக்கு இறங்கி போராடத் தொடங்கினர்.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பார்த்தால் நாட்டில் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கவில்லை.
நாட்டின் அரசியல் தொடர்பில், அரசியல் கட்சிகள் தொடர்பில், அரசியல்வாதிகள் தொடர்பில்; நாட்டின் இளைஞர், யுவதிகளுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தாங்கள் எதிர்பார்ப்பது நாட்டில் கிடைக்கவில்லை என்பதால், நாட்டின் அரசியல்வாதிகள் தொடர்பில் நம்பிக்கை இல்லாத நிலைமை இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
நாட்டுக்கென எதிர்காலம் ஒன்று இல்லாததன் காரணமாக கூடிய விரைவில் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கே இளைஞர், யுவதிகள் விரும்புகின்றனர்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக 1000க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருப்பதை அவதானிக்கலாம்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது.
அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றோம். இதன் பின்னர் பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருக்கின்றன.

