போராட்டத்தை சர்வாதிகாரமாக அடக்கும் ஜனாதிபதி

195 0

தமிழர் நலனுக்காக கரிசனை கொள்வதாக குறிப்பிட்டு எம்மை இனவாதிகளாக சித்தரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தான் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர்களை படுகொலை செய்து அந்த பழியை மக்கள் மீது சுமத்தியது.

ஜனநாயக போராட்டத்தை சர்வாதிகாரமாக அடக்கும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் நாட்டில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என 43 ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல பகுதியில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனநாயகத்திற்கு எதிராக அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் கொள்கை ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்டு.சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்புக் கூற வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை திட்டமிட்ட வகையில் பிற்போட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை எந்தத் தேர்தலையும் நடத்த போவதில்லை என்பதில் ஜனாதிபதி உறுதியாகவுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் மேற்கொண்ட போராட்டத்தில் பொலிஸார் வன்மமான முறையில் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது.போராட்டத்தில் தாக்கப்பட்டு சிரேஷ்ட பிரஜை ஒருவர் மரணமடைந்துள்ளார்,இதனை படுகொலையாக கருத வேண்டும்.

நிறைவேற்றுத்துறை ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படும் போது அதன் விளைவு பாரதூரமாக அமையும் என்பதற்கு வரலாற்றில் பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாக உள்ளன.முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 1983 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய பொதுத்தேர்தலை மக்கள் வாக்கெடுப்பு ஊடாக பிற்போட்டார்.இந்த மக்கள் வாக்கெடுப்பில் வாக்குகள் மோசடி செய்யப்பட்டன.முடிவு நாட்டில் அமைதியற்ற தன்மையை ஏற்படுத்தியது.

நாட்டில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய  முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன பாரிய எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பதவி விலகினார்.அதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில் வன்முறைகள்,கலவரங்கள் தீவிரமடைந்தன.

ஜனாதிபதி பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்டதை நாட்டு மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடினார்கள்.இந்த சம்பவங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நன்கு அறிவார்கள்.

தமிழ் மக்களின் நலன்களில் கரிசனை கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு எம்மை இனவாதிகளாக சித்தரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தான் 1983 ஆம் ஆண்டு தமிழர்களை படுகொலை செய்து அதன் பழியை மக்கள் விடுதலை முன்னணி மீது சுமத்தியது.நாட்டில் இனவாத முரண்பாட்டையும்,ஆயுத போராட்டத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியே தோற்றுவித்தது.

தேர்தல் எமது உரிமை ஆகவே தேர்தலை நடத்துங்கள் என நாட்டு மக்கள் வலியுறுத்துகின்ற நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்களுக்காக மக்களின் தேர்தல் உரிமையை மலினப்படுத்தியுள்ளார்.

ஜனநாயக உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீத சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விட்டால் அதன் விளைவு பாரதூரமாக அமையும் என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.