கிளிநொச்சியில் சமுர்த்தி பெறுபவர்களுக்கு அரசி வழங்கும் திட்டம்

131 0

கிளிநொச்சி மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் 22 ஆயிரத்து 454 பேருக்கும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஆறாயிரத்து 150 பேருக்கும் அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி வீதம் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கும்போது, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழும் விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்கும் முகமாகவும் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் அடிப்படையிலும் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையிலேயே ஒரு லட்சம் கிலோ வரையான நெல் இதுவரை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அதேவேளை, இந்த நெல்லை பாரிய மற்றும் நடுத்தர அரிசியாலைகள் மூலமும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் அரிசியாலைகள் உடாகவும் கொள்வனவு செய்து அரிசியாக்கி இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய வறிய குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் வகையான செயற்பாட்டையும் மேற்கொள்ளப்படவுள்ளது.குறிப்பாக இதுவும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடாகவே அமைந்துள்ளது. அதாவது வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் இருபத்தி இரண்டாயிரத்து 454 பேருக்கும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஆறாயிரத்து 150 பேருக்கும் அரசாங்கத்தின் உணவுப்பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி வீதம் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.