குடும்பப் பெண் ஒருவர் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கைது!

90 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமையில் வாழ்ந்து வந்த குடும்பப் பெண் ஒருவர் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (22.02.2023) சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட பெண்ணை, இன்றைய தினம் (23.02.23) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதறிகுடா கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவர், தனது கணவனைப் பிரிந்து வாழ்ந்து நிலையில், கஞ்சா கடத்தல் கும்பலின் வலைக்குள் சிக்கியுள்ளார்.

சம்பவத் தினமான நேற்றைய தினம் (22.02.2023) முள்ளியவளையிலிருந்து கொக்குளாய்க்கு கஞ்சா பொதியினை கொண்டுசென்று கொடுத்தால் 5 ஆயிரம் ரூபா பணம் தருவதாகத் தெரிவித்த கும்பல், பெண்ணிடம் 100 கிராம் கஞ்சா பொதியினை கொடுத்துக் கொக்குளாயில் கொண்டுச் சென்று கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

குறித்த பெண், முள்ளியவளையிலிருந்து பேருந்தில் ஏறிக் கொக்குளாய் செல்வதற்காகச் சிலாபத்தைச் சந்தியில் இறங்கி பேருந்துக்காகக் காத்திருந்தவேளை, கஞ்சா கடத்தல் சம்பவம் தொடர்பில் சிறப்பு அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய அந்தப் பகுதிக்குச் சென்ற சிறப்பு அதிரடிப்படையினர், பெண்ணின் உடைமையினை சோதனை செய்தபோது கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணைக் கைது செய்து முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், குறித்த பெண்ணினையும் சான்று பொருளையும் இன்றைய தினம் (23.02.23) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.