ஈழ அகதிகளால் அவுஸ்திரேலியாவுக்கு சிக்கல்

324 0

இலங்கையின் மனித உரிமை விடயத்தில் அவுஸ்திரேலியா கொண்டுள்ள நிலைப்பாடு மற்றும் ஈழ அகதிகள் உள்ளிட்டவர்களை நடத்திய விதம் என்பன, மனித உரிமைகள் பேரவையில் அவுஸ்திரேலியாவுக்கான ஆசனத்தைப் பெற்றுக் கொள்வதில் தடையை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் விசேட அரசியல்துறை நிபுணர்களை மேற்கோள்காட்டி அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லும் அகதிகள் நவுரு மற்றும் மானஸ் தீவுகளில் பலவந்தமாக தடுத்து வைக்கப்படுகின்றனர்.

அத்துடன் அவர்கள் பலவந்தமாக நாடுகடத்தப்படுவதுடன், மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பி வர முடியாதவாறு தடை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அவுஸ்திரேலியா வினைத்திறனாக செயற்படவில்லை.

இந்த விடயங்களின் அடிப்படையில் மனித உரிமைகள் பேரவையில் அவுஸ்திரேலியாவுக்கு ஆசனம் ஒன்று வழங்குவதற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவுக்கு மனித உரிமைகள் பேரவையில் ஆசனம் ஒதுக்குவது தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.