4 பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி விடுதலை!

131 0

விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாணம் மற்றும்  கொழும்பில்  கைது செய்யப்பட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள்  நேற்று செவ்வாய்க்கிழமை (21) கொழும்பு மேலதிக நீதவான் நீதி மன்றத்தினால் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 21 சந்தேக நபர்களின்  வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை (21) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் மற்றும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

 

குறித்த 21 நபர்களும் 2014 ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பெயரில் கைது  செய்யப்பட்டு வவுனியா,கிளிநொச்சி, பூசா ஆகிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் முகாம்களில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் சில மாதங்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சிறை கைதிகள் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட நிலையில்  அவர்களின் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் நாடளாவிய ரீதியில் பல சாத்வீக போராட்டம் மேற்கொண்டதன் காரணமாக 2015,2016 ஆண்டு பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த 21 நபர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று  குறித்த நபர்களின்  வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் விசாரணைகளின் பின்னர் 21 நபர்களும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி அனைத்து வழக்குகளிலும் இருந்து எந்தவித நிபந்தனைகளும் இன்றி கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.