வரவு – செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்காமலிருப்பது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயற்பாடாகும்.
நிதி முகாமைத்துவம் தொடர்பான அதிகாரம் காணப்படுவது பாராளுமன்றத்திற்கேயன்றி, திறைசேரிக்கு அல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தேர்தலை அத்தியாவசியமற்ற விடயமாக அரசாங்கம் வகைப்படுத்தியுள்ளமை பாரிய தவறாகும். வரவு – செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை அந்தந்த விடயங்களுக்கு ஒதுக்குவது திறைசேரியின் பொறுப்பாகும். அந்த பொறுப்பினை திறைசேரியினால் தட்டிக்கழிக்க முடியாது.
மாறாக இதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமெனில் அதற்கான யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இது தொடர்பில் நாம் நிச்சயம் நீதிமன்றத்திற்கு அறிவிப்போம்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்காமலிருப்பது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் செயற்பாடாகும்.
நிதி தொடர்பான அதிகாரம் காணப்படுவது பாராளுமன்றத்திடமேயன்றி , திறைசேரியிடமல்ல. எனவே தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வேறு விடயங்களுக்காகப் பயன்படுத்தினால் அது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயற்பாடாகும்.
அரசியலமைப்பு ரீதியில் தேர்தலை ஒத்தி வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவது ஜனாதிபதியின் பொறுப்பாகும்.
எனவே ஜனாதிபதி கூறும் நேரத்தில் தேர்தலுக்குச் செல்ல நாம் தயாராக இல்லை. அரசியலமைப்பு ரீதியில் தேர்தலுக்கு செல்வதற்கே நாம் தயாராகவுள்ளோம்.
எனவே திட்டமிட்ட படி மார்ச் 9இல் தேர்தல் இடம்பெறாவிட்டால் அது அரசியலமைப்பு மீறலாகும். தேர்தல் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கே காணப்படுகிறது. அதற்கும் அரசியலமைப்பு ரீதியான விதிமுறைகள் உள்ளன என்றார்.

