அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்க ஏன் முன்வர முடியாது

115 0

தேர்தலுக்கு தேவையான பணத்தை வழங்குவதாக தெரிவிக்கும் அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் அந்த பணத்தை மக்களுக்கு நிவாரணம் வழங்க பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அத்துடன் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கஷ்டப்படும் போது இந்த நிறுவனங்களால் ஏன் உதவி செய்ய முடியாமல் போனது என கேட்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சி கேள்வி எழுப்பியது.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அதன் செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவன் சொமிரத்ன இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என திறைசேரியின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரிவித்திருக்கிறார்.

தேர்தலுக்கு பணம் செலவழிக்கப்பட்டால் நாட்டில் ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல் போகும் நிலை ஏற்படும். அதனாலே தற்போது தேர்தலுக்கு பணம் வழங்குவதற்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்த தேவையான பணம் ஒதுக்குவதற்கு இல்லை என தெரிவித்ததுடன் அதற்கு தேவையான பணத்தை அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பெற்றுத்தர முடியும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு அவ்வாறு செய்ய முடியும் என்றால் அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி அதற்கு உறுப்பினர்களை நியமித்துக்கொள்வதன் மூலம் நாட்டின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. அப்படியாக இருந்தால் ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தலை நடத்தவேண்டும்.

அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை அரச சார்ப்பற்ற நிறுவனங்களிடம் பெற்றுத்தருவதாக தெரிவிப்பவர்கள், தேர்தலில் தெரிவுசெய்யப்படும் 8ஆயிரம் உறுப்பினர்களுக்கும் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை யார் வழங்குவது? அதற்கு அந்த நிறுவனங்கள் முன்வருமா என கேட்கிறோம்.

கடந்த 6,7 மாதங்களுக்கு முன்னர் நாட்டு மக்கள் எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுக்கொண்டிருக்கையில், அப்போது இந்த அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் ஏன் முன்வரவில்லை என கேட்கிறோம்.

மேலும் வங்குராேத்து நிலையில் இருந்த நாட்டை ஓரளவு தலைதூக்கவைத்து, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மார்ச் மாதமளவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அந்த உதவி கிடைத்தால், பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கே ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துவருகிறார்.

ஜனாதிபதியின் இந்த முயற்சிகள் வெற்றிகொள்ளப்பட்டால், எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய முடியாமல் போகும். அதனாலே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைப்பதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு இவர்கள் தூண்டி வருகின்றனர் என்றார்.