ஜே.வி.பி க்கு ஆட்சியதிகாரம் கிடைக்கப் போவதில்லை

96 0

பௌத்த பிக்குகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை கொலை செய்து, தலதா மாளிகைக்கு தாக்குதல் நடத்திய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற அரசியல் கட்சிகளுக்கு நாட்டின் ஆட்சி அதிகாரங்கள் ஒருபோதும் கிடைக்க போவதில்லை என்று எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இன்று ஜே.வி.பி புதிய பெயர், புதியதொரு அடையாளத்தில் தேர்தலில் போட்டியிட்டாலும், நாட்டு மக்களுக்கு இந்த கட்சி பற்றியும், கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும் நன்கு அறிவார்கள்.

உலகிலேயே பௌத்த நாடு இலங்கை மட்டும் தான். அன்று தொடக்கம் இன்று வரை நாட்டின் அரசாட்சி, நாட்டை ஆளும் உரிமை உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கப்பெற்றதுபௌத்த மத ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினர்களுக்கு மாத்திரமேயாகும்.

மேலும் அன்று தலதா மாளிகையை பாதுகாத்தவர்களுக்கே அரச பதவி வழங்கப்பட்டது. ஆனால்  ஜே.வி.பி என்ன செய்தது? ஜேவி . பி.காலத்தில் , 5 இற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறான ஒரு கும்பலுக்கு இந்த நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரம் கிடைக்க போவதில்லை.

வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்றவர்களின் கைகளை துண்டித்து, அவர்களை கொலை செய்த மக்கள் விடுதலை முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள் இன்று தேர்தல் பிரசார மேடைகளில் தங்களை போன்ற ஜனநாயக கொள்ளைகளை பின்பற்றக்கூடிய வேறு எந்த அரசியல் கட்சிகளும் இல்லையென்று கூறித் திரிகிறார்கள்.

இதுவொரு பௌத்த நாடாகும். புத்தருக்கு பூஜைகள் செய்த நாடு. தலதா மாளிகை மீது தாக்குதல் மேற் கொண்டவர்களுக்கு என்ன நடந்தது? என்பது எமக்கு தெரியும். தேர்தல் நடத்தப்பட்டு வாக்குகள் எண்ணப்படும் போது இவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நாம் அனைவரும் பார்க்கலாம் என்றார்.