ஹந்தானையில் சர்வதேச பறவைகள் பூங்கா-இன்று திறப்பு

78 0

ண்டி, ஹந்தானையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச பறவை பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திங்கட்கிழமை (20) திறந்து வைக்கப்படவுள்ளது.

ஹந்தானை சர்வதேச பறவை பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையம் திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படும்.

இருப்பினும் எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை முதலே பொதுமக்கள் கண்டுகளிப்பதற்காக அனுமதிக்கப்படுவர்.

மேலும், ஹந்தானை தேயிலை அருங்காட்சியக வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த 27 ஏக்கர் அயல்நாட்டுப் பறவை பூங்கா மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா வலயம் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகளின் இருப்பிடமாக உள்ளது.

இதன் தலைவர் நிஷாந்த கோட்டேகொட கூறுகையில்,

இந்த பூங்காவில் வெளிநாடுகளுக்கு சொந்தமான பறவைகள் உள்ளன. இங்கு புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் காயமடைந்த பறவைகளுக்கு சிகிச்சை அளித்து விடுவிக்கும் பிரிவும் உள்ளது.

புதிய சர்வதேச பறவை பூங்கா 490 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பறவைகள் உள்ளிட்ட அனைத்து பறவைகளும் பூங்காவில் பெரிய கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளன. இப்பூங்காவில் பறவைகளை பராமரிப்பதற்காக சுமார் 100 பேர் பணிபுரிகின்றனர் என்றார்.