சென்னையில் ஒரே நாளில் 2,900 தெருக்களில் கொசு ஒழிப்பு பணி

74 0

சென்னை மாநகராட்சி சார்பில் ஒரேநாளில் 2 ஆயிரத்து 919 தெருக்களில் தீவிர கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சியில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், மேயர் பிரியா தலைமையில் கடந்த 11-ம்தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் மழைநீர் வடிகாலில் 250 கிமீ நீளத்துக்கு கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து 239 கிமீ நீளத்துக்கு கொசு ஒழிப்பு புகை பரப்பியும், நீர்நிலைகளில் 58.34 கிமீ நீளத்துக்கு கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், 2 ஆயிரத்து 919 தெருக்களில் வாகனங்கள் மற்றும் கையினால் இயக்கும் இயந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்புப் புகை பரப்பும் பணியும் மேற்கொள்ளப்பட்டன. 16 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றி நீர்நிலைகளுக்கு அனுப்பப்பட்டது.அதிகாரிகள் கண்காணிப்பு: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுரையின்படி, வட்டார துணை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள், மாநகர நல அலுவலர், தலைமை பூச்சித் தடுப்பு அலுவலர் மற்றும் சுகாதார அலுவலர்கள், மண்டல நல உதவி அலுவலர்கள் கண்காணிப்பில் இப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.