மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மடுக்கரை, முள்ளிமோட்டை கிராமத்தில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து தேவைகளுக்கு பாலம் அமைத்துக் கொடுக்கப்படாததால் அங்குள்ள மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
அத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் தமது கிராமத்துக்கு நேரடியாக வருகை தந்து, பார்வையிட்டு, உள்ளக வீதி மற்றும் பாலம் போன்றவற்றை அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மடுக்கரை முள்ளிமோட்டை கிராமத்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மடுக்கரை முள்ளிமோட்டை கிராமத்தில் 2018ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட 90 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் 18 குடும்பங்கள் ஆற்றைக் கடந்து குடியேற்றப்பட்டுள்ளன.

வீடுகளுக்கு அருகாமையிலேயே அருவி ஆற்றின் கிளை ஆறு ஓடிக்கொண்டிருப்பதால் தற்காலிக பாலம் கூட அமைத்துக் கொடுக்கப்படாமல், அங்கே வசிப்பவர்கள் ஆற்றில் இறங்கியே ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
கோடை காலத்தில் ஓரளவு நீர் வற்றி காணப்பட்டாலும், மழைக் காலங்களில் ஆற்றில் நீர் நிறைந்து ஓடுவதால் அன்றாட கடமைகளை செய்ய முடியாமல் அப்பகுதி மக்கள் திண்டாடி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினையால் அவர்கள் தமது உறவினர்களின் வீடுகளிலேயே வசித்து வருகிறார்கள்.
அப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதில் இருந்து உள்ளக வீதிகள் ஒழுங்காக அமைத்துக் கொடுக்கப்படாததாலும், குறித்த ஆற்றினை கடந்து செல்வதற்கு பாலம் அமைத்துக் கொடுக்கப்படாததாலும் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் அன்றாட போக்குவரத்தினை மேற்கொள்ளவும், பாடசாலை செல்வதற்கும் அவசர மருத்துவ தேவைகளை பெறுவதற்கும் இயலாமல் தவிக்கிறார்கள்.
மடுக்கரை மற்றும் முள்ளிமோட்டை கிராமத்தில் உள்ளக வீதிகளை சீரமைப்பது தொடர்பாக உரிய அதிகாரிகள் இன்று வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே, வடக்கு மாகாண ஆளுநர் எமது கிராமத்து மக்கள் மீது அக்கறை கொண்டு தற்காலிகமாக பாலம் அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






