போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கைப்பற்றிய பணம் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
போராட்டக்காரர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கைப்பற்றிய 17,856,000 ரூபா பணம் தன்னுடையது என்றும் அதனை நாட்டின் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க வைத்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு தெரிவித்தது.
குறித்த பணத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு மீண்டும் கையளிக்குமாறு அவர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி ஹரி குப்த சேனாதீர கோரிக்கை விடுத்தார்.
எனினும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஸி அரசகுலரத்ன இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்த பணம் தொடர்பில் நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் அல்லது இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு குறித்த பணத்தினை அமைச்சர் திரன் அலஸிடம் ஒப்படைக்குமாறு மேல் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அன்றைய தினம் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக பகுப்பாய்வு அறிக்கைகள் வெளிப்படுத்தியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

