தேர்தலை நிறுத்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை

166 0

தேர்தலை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. எனினும் நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் இயலுமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) ஆற்றவுள்ள அக்கிராசன உரையின் போது தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கான யோசனையை முன்வைக்கவுள்ளதாகவும், அதற்கு ஆளுந்தரப்பு ஆதரவளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இவ்வாறு தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் யோசனைகளை முன்வைத்துள்ளதா என நேற்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் எந்த யோசனைகளையும் முன்வைக்கவில்லை. நாட்டின் நிதி நெருக்கடிகள் அடிப்படையில் அரசாங்கத்தினால் முடிந்தவை தொடர்பிலும், செய்ய முடியாதவை தொடர்பிலும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம்.

வரி மற்றும் வரியல்லா வருமானமாக அரசாங்கத்திற்கு 158 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே செலுத்த வேண்டிய கடன்கள் பணம் அச்சிடப்பட்டே செலுத்தப்பட்டுள்ளது. நிதி முகாமைத்துவ அதிகாரம் பாராளுமன்றத்திற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நிதி முகாமைத்துவம் எதிர்க்கட்சி உள்ளிட்ட சகல தரப்பினராலும் யோசனைகளை முன்வைக்க முடியும். அது அவர்களின் பொறுப்பாகும். ஆனால் அவ்வாறானதொரு முறைமை காணப்படுவதாக தெரியவில்லை என்றார்.